காட்டு விலங்குகளான சிங்கம், புலி, கரடியை சந்தித்த எனக்கு நண்டுகளை கண்டு பயமில்லை என சட்டப்பேரவையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் இன்று பேசிய மையிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் நடராஜ், பட்டினப்பாக்கத்தில் தூண்டில் வளைவுகள் அமைக்கப்படுமா? என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், கடல் சீற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும். மீனவர்களுக்கு பெரும்பாக்கத்தில் புதிய வீடுகள் கட்டித் தரப்படும் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், சிலர் விளம்பரத்துக்காக என் வீட்டில் நண்டு விடும் போராட்டம் நடத்துகின்றனர். காட்டு விலங்குகளான சிங்கம், புலி, கரடி போன்றவற்றை பார்த்துவிட்டுதான் இங்கு வந்திருக்கேன். நண்டுகளுக்கு பயந்தவன் நான் இல்லை என அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் ஜெயக்குமார் 2002ல் வனத்துறை அமைச்சராக இருந்தார். அப்போதுதான் சிங்கம், புலியை பார்த்தார் என கூறியதும் பேரவையில் பெரும் சிரிப்பலை எழுந்தது.