உத்தரப் பிரதேசத்தில் உள்ள அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானம் நடைபெற்று வருகிறது. தற்போது நிறைவடையும் தருவாயில் உள்ளது. இந்தக் கோயில் இம்மாதம் 22ம் தேதி திறக்கப்படவிருக்கிறது. இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், கோயில் அறக்கட்டளை சார்பில் சமீபத்தில் மொத்தம் 7 ஆயிரம் சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.
'அயோத்தி ராமர் கோயில் என்பது பாஜக, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அரசியல் திட்டம்' என குறிப்பிட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, மல்லிகார்ஜுனா கார்கே ஆகியோர் ராமர் கோவில் குடமுழுக்கு விழாவிற்கான அழைப்பை நிராகரித்துள்ளனர்.
இந்நிலையில் சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமியிடம் ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு செல்வீர்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம். அதிமுகவைப் பொறுத்த வரைக்கும் எம்.ஜி.ஆர் காலத்திலும் சரி, ஜெயலலிதா காலத்திலும் சரி மதத்திற்கும் ஜாதிக்கும் அப்பாற்பட்டவர்கள் நாங்கள். உங்களில் யார் விருப்பப்பட்டாலும் ராமர் கோவிலுக்கு செல்லலாம். எனக்கு வாய்ப்பு இருந்தால் நான் கலந்து கொள்வேன். எனக்கு கால் வலி இருக்கிறது. கொஞ்சம் சிரமம் இருக்கிறது. அதைப் பொறுத்து தான் முடிவு செய்யப்படும்.
நல்ல கூட்டணி அமையும். கூட்டணி அமைந்த பிறகு யார் யாருக்கு எவ்வளவு சீட்டுகள் என்பதெல்லாம் உங்களுக்கு தெளிவுபடுத்துவேன். போக்குவரத்து தொழிலாளர்கள் ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டார்கள். பலமுறை இந்த அரசுக்கு அவர்கள் கோரிக்கை வைத்தாலும் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. தொழிலாளர்களின் குறைந்தபட்ச கோரிக்கையாவது நிறைவேற்றித் தாருங்கள் என்று வேண்டுகோள் வைத்தார்கள். அதையும் இந்த அரசு நிராகரித்துவிட்டது. அதனால் அவர்கள் போராட்டத்திற்கு தள்ளப்பட்டார்கள். உயர்நீதிமன்றம் தீர்ப்பின்படி தொழிற்சங்கங்கள் எல்லாம் பணிக்கு திரும்பிச் செல்ல வேண்டும் என வலியுறுத்தியதன் காரணமாக வேலைக்கு திரும்பி இருக்கிறார்கள். திமுக, தொழிலாளர் கஷ்ட நஷ்டங்களை புரிந்து கொண்டு அவர்கள் வைக்கும் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்' என்றார்.