தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ''நிறையத் தவறுகளை கடந்த எட்டு மாத காலங்களாக நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். குறிப்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பேசுவதை எல்லாம் பார்க்கும் பொழுது, 92% நிதியை சம்பளமாக கொடுக்கிறோம் 8 சதவீதத்தை மட்டுமே ஆக்கப்பூர்வ பணிகளுக்குப் பயன்படுத்துகிறோம் எனக் கூறுகிறார். அப்படி இருக்கும் பொழுது எப்படி நமது குழந்தைகளை தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு அனுப்ப முடியும். உங்களிடம் நிதியை கிடையாது. இரண்டாவது மத்திய அரசு கொண்டு வந்து இருக்கக்கூடிய புதிய கல்விக் கொள்கை திட்டத்தை கூட முழுமையாக நடைமுறைப்படுத்தாமல் இருக்கிறார்கள். புதிய கல்விக் கொள்கையின் முக்கியமான கொள்கையே தாய் மொழியை வளர்ப்பது.
குறிப்பாக ஆரம்பக் கல்வியை உங்களது சொந்த மொழியில் பயிலுங்கள் என்று சொல்வதற்காக தான் புதிய கல்விக் கொள்கை. அதையும் இவர்கள் ஏற்றுக்கொள்ள மறுகிறார்கள். மூன்றாவது அரசுப் பள்ளியின் தரம் 2017ல் இருந்து தொடர்ச்சியாகத் தரம் குறைந்துகொண்டே வருகிறது. கேரளா, கர்நாடகா, தெலுங்கானா நம்மை விட பெட்டரா இருக்கிறார்கள். அதற்காக மாநில அரசு எந்த கவனமும் கொடுக்காமல் இருக்கிறது. தொடர்ச்சியாக பள்ளிக் கல்வித்துறை மந்திரி பேசுவது நமக்கு புரிவதே இல்லை''என்றார்.