அதிமுகவின் நிறுவனர் எம்ஜிஆர் வரலாற்றை நடிகர் ரஜினிகாந்த் மறைத்து பேசியது தவறு என அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசுகையில், ''வரலாற்றை மறைக்கக் கூடாது. அண்ணாவிற்கு பிறகு திமுகவில் யார் முதலமைச்சராக வேண்டும் என்ற கேள்வி எழுந்தது. அப்பொழுது எல்லோரும் நாவலர் நெடுஞ்செழியன் என்று சொன்னபோது எம்ஜிஆர் மட்டும்தான் கலைஞரை முன்மொழிய வேண்டும் என்றார். முரசொலி மாறன் உள்ளிட்டவர்கள் கேட்டதற்கு இணங்க முடிவெடுத்து, அதன்பிறகு நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரனை சந்தித்து பேசி ஒட்டுமொத்தமாக மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றக்கூடிய முதல்வராக இருந்தால் அது கலைஞராகத்தான் இருக்கும். எனவே அவரை தேர்ந்தெடுப்போம் என்று சொன்னார் எம்ஜிஆர். அவர்தான் முழுக்க முழுக்க காரணம்.
இதைக் கலைஞரே 'எங்கள் தங்கம்' படத்தில் சொல்லி இருக்கிறார். கலைஞரை அவருடைய திருவாயால் மலர்ந்து 'திராவிட கர்ணன்' என்று எம்ஜிஆருக்கு பெயர் சூட்டினார். அவர்தான் எங்களை ஆட்சியில் அமர வைத்து அழகு பார்த்தவர். எங்களுடைய அருமை நண்பர் எம்ஜிஆர் தான் என்று சொன்னார்.
இந்திய வரலாற்றில் இது உண்மை. ஆனால் இதை கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோர் கலைஞரின் நூற்றாண்டு விழாவில் தவறான இந்த வரலாற்றை மறைத்து பேசுவது உண்மையிலேயே வருத்தம். கமல்ஹாசன் பேசியது கூட பெரிது இல்லை அவர் எப்போதோ மாறிவிட்டார். விக்ரம் படத்தோட அவர் வாயை வாடகைக்கு விட்டு விட்டார். ஆனால் ரஜினிகாந்த் எப்போதும் நேர்மையாக பேசுவார். அவர் இதில் கருத்து சொன்னது தான் உண்மையிலேயே மன வருத்தமாக இருக்கிறது. சூப்பர் ஸ்டார் இப்படி பேசுவாரா? எங்களைப் போன்றவர்களுக்கு நிச்சயமாக அதுமாதிரி பேச மாட்டார் என்று நினைத்தோம். இப்படி பேசுவார் என்று எதிர்பார்க்கவே இல்லை. ரஜினிகாந்த் கமர்சியலாக தன்னுடைய படங்களுக்கு ஏதேனும் ஆபத்து வந்துவிடுமோ என்ற எண்ணத்தில் இப்படி பேசி விட்டார்'' என்றார்.