வேலூர் மாவட்டம் ஆம்பூர் சட்டமன்ற தொகுதி மாதனூர் ஒன்றியத்திற்கு உட்பட கிராமங்களில் வேலுார் பாராளுமன்ற அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் மற்றும் ஆம்பூர் இடை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஜோதி ராமலிங்கம் ராஜா ஆகியோர் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்டு பிரச்சாரம் மேற்கொண்டனர்.
பிரச்சாரத்துக்கு மத்தியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சண்முகம், முன்னாள் அமைச்சர் துரைமுருகனை அன்போடு அண்ணன் என்று அழைக்க கூடியவன் நான். அவர் குடும்பத்தோடு எங்கு பார்த்தாலும் மரியாதையாக பேசி பழகியவன் நான். திராவிட தலைவர் என்ற முறையில் மரியாதை வைத்திருக்கின்றேன். அவர் வாயிலேயே சேற்றை வாரி தூற்றுவார் என்று தொலைகாட்சிகளுக்கு அளித்த பேட்டியில் கூறி இருப்பது நான் கொஞ்சம் கூட எதிர் பார்க்கவில்லை.
நாடாளுமன்ற தேர்தலில் அவர் மகனை நேரடியாக சந்திக்க முடியாத நிலையில் வருமான வரித்துறையினர் நடத்தப்பட்ட சோதனைக்கு என் மீது குற்றசாட்டியுள்ளார். மத்திய மாநில அரசுகளின் துணையோடு இந்த வருமான வரி சோதனை நடைபெறுகிறது. என் மீது சேற்றை வாரி பூசியிருக்கிறார். பொதுவாக இந்த சோதனைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.
தேர்தலிலே இதையே ஒரு அரசியல் காரணமாக வைத்து அனுதாபம் பெறவேண்டும் என்று உணர்விலேயே துரைமுருகன் பேசுவது வருத்தமளிக்கின்றது. நான் வாயை திறந்தால் துரைமுருகனால் ஒரு மாதத்துக்கு நிம்மதியாக தூங்க முடியாது, அவர் வெளிநாட்டில் வாங்கி வைத்துள்ள சொத்துக்கள் பற்றி கூறுவேன் என எச்சரிக்கையும் விடுத்தார்.
தனது வீட்டில் நடந்த ரெய்டு பற்றி துரைமுருகன் தனது பேட்டியில், என் மகன் கதிர்ஆனந்தை எதிர்த்து வெற்றி பெற முடியாதவர்கள், களத்தில் மக்களை சந்திக்க பயப்படுபவர்கள், தேர்தல் வெற்றிக்காக என் மீது வருமானவரித்துறையை ஏவியுட்டுள்ளார்கள். இதற்கெல்லாம் இந்த பனங்காட்டு நரி பயப்படாது, திமுக தொண்டன் கூட பயப்படமாட்டான் எனச்சொல்லியிருந்தார். இதில் ஏ.சி.சண்முகத்தை எந்த இடத்திலும் நேரடியாக துரைமுருகன் குற்றம்சாட்டவில்லை.
எங்கப்பன் குதிருக்குள்யில்லை என்பதைப்போல, நான் அப்படி செய்பவனல்ல என வாக்குமூலம் தந்து மக்களுக்கு அதிகளவு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளார் ஏ.சி.சண்முகம்.