மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்ட போது மூத்த அமைச்சர்கள் அவருடன் இருந்தனர் என்று தான் சொன்னதாக வெளியான செய்தியில் உண்மையில்லை என முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன் ராவ் தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்திவரும் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தில் தமிழக முன்னாள் தலைமை செயலாளர் ராம மோகன ராவ் கடந்த ஏப்ரல் 7ம் தேதி ஆஜரானார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்ட போது அமைச்சர்கள் உடன் இருந்தனர். செப்டம்பர் 28ம் தேதி ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த ஆலோசனையில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதாவை அமைச்சர்கள் பார்த்தார்கள் என்று ராமமோகன ராவ் கூறியது உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டு, யாரையோ தப்பிக்க வைப்பதற்காக தவறான செய்தியை கூறி வருகிறார் என தெரிவித்தார். இதேபோல், அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி உள்ளிட்டோரும் ராமமோகன ராவ் கூறியது உண்மைக்கு புறம்பானது. அவரை விசாரணை செய்ய வேண்டும் என கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில், இன்று ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் விளக்கம் அளிக்க வந்த ராம மோகன் ராவ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்ட போது அமைச்சர்கள் உடன் இருந்தனர் என்று நான் கூறியதாக தகவல் வெளியானது. பத்திரிகைகளில் வெளியான அந்த தகவல் உண்மையானது அல்ல.
ஜெயலலிதாவுடன் அமைச்சர்கள் இருந்தனர் என்று நான் கூறவில்லை. நான் சொன்ன தகவல்கள் ஆணையத்திடம் உள்ளது. தற்போது, ஆறுமுகசாமி ஆணையத்தில் விளக்கம் அளிப்பதற்காக வந்தேன். அமைச்சர்கள் பார்த்தார்களா, இல்லையா என நான் சொல்லவே இல்லை என்று கூறினார்.