பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறாகப் பதிவிட்ட வழக்கில் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையின் முன் நடிகர் எஸ்.வி.சேகர் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறு தகவல்களை ஃபேஸ்புக் வாயிலாகப் பகிர்ந்தது தொடர்பாக நடிகர் எஸ்.வி.சேகர் மீது புகார்கள் எழுந்ததோடு பெண்கள் அமைப்புகள் சார்பில் போராட்டங்களும் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். தன் மீதான ரத்து செய்யக் கோரி நடிகர் எஸ்.வி.சேகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, அமெரிக்க வாழ் தமிழர் ஒருவரின் முகநூல் பதிவைத் தான் பகிர்ந்ததாகவும், இதற்காக நீதிமன்றத்தில் மீண்டும் ஒருமுறை மன்னிப்பு கேட்கத் தயாராக இருப்பதாக எஸ்.வி.சேகர் குறிப்பிட்டார். இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வரும் 2ம் தேதி மத்திய குற்றப்பிரிவு காவலர்கள் முன்பு எஸ்.வி.சேகர் ஆஜராக வேண்டும் எனவும், பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாக ஃபேஸ்புக்கில் எழுதிய அந்த அமெரிக்க வாழ் தமிழர் குறித்த அனைத்து விவரங்களையும் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.