சென்னை அண்ணா அறிவாலயத்தில், கையாலாகாத அதிமுக ஆட்சியில் படுகொலையாகும் மக்கள் பறிபோகும் ஜனநாயகம் என்ற தலைப்பில் மாதிரி சட்டமன்றக் கூட்டம் இன்று காலை நடந்தது. சபாநாயகராக சக்கரபாணி பொறுப்பேற்று மாதிரி சட்டமன்றக் கூட்டத்தை நடத்தினார்.
இதில் பேசிய கருணாஸ், சட்டமன்றத்தில் எனக்கு கச்சேரி நடத்த வாய்ப்பு கொடுத்த சபாநாயகர், நேற்று மக்கள் பிரச்சனையை பற்றி பேச வாய்ப்பு கொடுக்கவில்லை. ஒட்டுமொத்தமாக தமிழகத்தையே உலுக்கிய தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு யார் அனுமதி கொடுத்தது என்தற்கு, ஒரு துணை வட்டாட்சியர் அனுமதி கொடுத்தார் என்பது எந்த அளவுக்கு கேவலமாக இருக்கிறது. அதனை நான் தொலைக்காட்சியில் பார்த்து தெரிந்து கொண்டேன் என்று ஒரு முதல் அமைச்சர் சொல்லுகிறார். இது ஒட்டுமொத்தமாக இந்த நிர்வாகத்திற்கான சீர்கேடு அல்லவா என்ற கேள்வியைத்தான் நான் கேட்டேன்.
அதற்கு என்ன செய்தார்கள் தெரியுமா? அனைவரும் தெரிந்து கொள்ளுங்கள். புரட்சித் தலைவி அம்மா அவர்கள் எனக்கு சமுதாய ரீதியாக இருக்கக்கூடிய இடையூறுகளுக்காக எனக்கு பாதுகாப்பு அதிகாரிகள் இரண்டு பேரை அமைத்திருந்தார். மக்களை சந்திப்பதற்காக ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, மாவட்டங்களுக்கு காவல்துறை உதவி ஆய்வாளர்களால் அழைத்துச் செல்லப்படுவேன்.
நேற்று இந்த அரசாங்கத்திற்கு எதிராக துப்பாக்கிச் சூடு சம்பவத்தை கண்டித்து, அது தவறு என்று சொன்னதற்காக, துப்பாக்கிச் சூட்டில் பலியான 13 பேருக்கு இந்த அவையில் அஞ்சலி செலுத்தினோமே, இந்த அடிப்படை நாகரீகம் அந்த அவைக்கு இல்லையே என்று நான் கேள்வி கேட்டதற்காக இரவோடு இரவாக எனக்கு பாதுகாப்பாக இருந்த அதிகாரிகள் நீக்கப்பட்டிருக்கிறார்கள்.
இன்றைக்கு நடக்கக் கூடிய தவறுகளை சுட்டிக்காட்டவே கூடாது என்று சொன்னால் அது என்ன ஜனநாயகம். என்னுடைய தொகுதியைச் சேர்ந்தவர்கள் மனு அளிக்கிறார்கள். அந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க சொன்னால் எடுக்க மறுக்கிறார்கள். ஒரு சத்துணவுத் திட்டம் எதற்காக கொண்டு வரப்பட்டது. கணவனை இழந்தவர்கள், கைக்குழந்தையோடு தவிப்பவர்கள் எப்படி இந்த மண்ணில் வாழ்வது என்று போராடிக்கொண்டிருப்பவர்களுக்காக உருவாக்கப்பட்ட அந்த திட்டத்திற்கு யாரையாவது பரிந்துரை செய்தால், 3 லட்சம் வேண்டும். 4 லட்சம் வேண்டும். 5 லட்சம் வேண்டும் என்று கேட்கிறார்கள்.
சபாநாயகர்: மாண்புமிகு உறுப்பினர் ஆதாரங்கள் இல்லாமல் குற்றச்சாட்டு சொல்லக்கூடாது
கருணாஸ் : ஆதாரத்தோடுதான் சொல்லுகிறேன். நான்தான் ஆதாரம், கூவத்தூருக்கும் நான்தான் ஆதாரம். சட்டமன்றத்திற்கும் நான்தான் ஆதாரம். எனது தொகுதிக்கும் நான்தான் ஆதாரம். மனிதனுடைய வாழ்க்கைக்கு பணம் தேவைதான். பணத்திற்காகவே ஒரு வாழ்க்கை என்றால் அது வாழ்க்கை அல்ல. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாம், மாண்புமிகு என்று அழைக்கப்படும் நாம், மாண்போடு நடத்துக்கொள்ள வேண்டாமா? என கேள்வி எழுப்பினார்.