தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுகவின் நிறுவனருமான பேரறிஞர் அண்ணாவின் 115 ஆவது பிறந்த நாள் தமிழக அரசு சார்பில் அரசு விழாவாக இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி காஞ்சிபுரம் அன்னை இந்திரா காந்தி சாலையில் உள்ள காஞ்சிபுரம் மாநகராட்சி வளாகத்தில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் உருவ சிலைக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதனை தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான இன்று (செப்டம்பர் 15) காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பன் கல்லூரி மைதானத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை முறைப்படி தொடங்கி வைத்தார். திட்டத்தை மாநிலம் முழுவதும் தொடங்கி வைக்கும் அடையாளமாக 13 பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான ஏடிஎம் கார்டுகளை வழங்கினார். தேவி சம்பத் என்ற பெண்மணிக்கு இந்த திட்டத்திற்கான முதல் ஏடிஎம் கார்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதையடுத்து இந்த திட்டம் குறித்த காணொளி விழாவில் ஒளிபரப்பப்பட்டது. விழாவில் இந்த திட்டத்தின் கீழ் பயனடைந்த பெண்கள் முதல்வருக்கும், தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இத்திட்டம் குறித்து சிறப்புரையாற்றி பேசினார்.
இந்நிலையில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளையொட்டி, காஞ்சிபுரத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா நினைவு இல்லத்தில் உள்ள அவரது உருவச் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து அங்கு வைக்கப்பட்டுள்ள பார்வையாளர் குறிப்பேட்டில் குறிப்பு எழுதி கையொப்பமிட்டார். அதில்,“பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் அன்று திராவிட மாடலின் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை அண்ணா பிறந்த காஞ்சி மண்ணில் தொடங்கி வைப்பதில் பெருமையடைகிறேன். அண்ணா வழியில் அயராது உழைப்போம். நன்றி” என குறிப்பிட்டுள்ளார்.
அப்போது குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் எம்.மகாலட்சுமி, நாடாளுமன்ற உறுப்பினர் ஜி. செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள் கே. சுந்தர், சி.வி.எம்.பி. எழிலரசன், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் கலைச்செல்வி மோகன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் எனப் பலரும் உடன் இருந்தனர்.