Skip to main content

'70 வயது மூத்த குடிமகன் நான்'- நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்த இபிஎஸ்

Published on 27/08/2024 | Edited on 27/08/2024
'I am a 70-year-old senior citizen'- EPS pleads in court

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் மத்திய சென்னை தொகுதியில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதியை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “மத்திய சென்னை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் தயாநிதி மாறன் அவருடைய நாடாளுமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியில் 75 சதவீதத்தைச் செலவு செய்யவே இல்லை. அப்படியென்றால், இவர் எப்படி செயல்பட்டிருப்பார் என்பதை மக்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்” எனப் பேசியிருந்தார்.

இதையடுத்து எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் எம்.பி. சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில், “தொகுதி மேம்பாட்டு நிதியை 75% பயன்படுத்தவில்லை என சென்னை புரசைவாக்கத்தில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசிய பேச்சு தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உள்ளது” எனத் தெரிவித்திருந்தார். தொடர்ந்து இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏக்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

தொடர்ந்து வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் எடப்பாடி பழனிசாமி இன்று (27.08.2024) நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. அதன்படி தற்போது எடப்பாடி பழனிசாமி நீதிமன்றத்தில் நேரில் ஆஜர் ஆனார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர், இந்த வழக்கை தான் ஏற்று நடத்த இருப்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளதாகவும், வழக்கை நீதிமன்றம் 19ஆம் தேதி ஒத்திருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில்  திமுக எம்.பி தயாநிதி மாறன் தொடர்ந்துள்ள அவதூறு வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து எடப்பாடி பழனிசாமி சிறப்பு நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார். 'உடல்நல பாதிப்பு காரணமாக மருந்து உட்கொண்டு வருவதாகவும், 70 வயதான மூத்த குடிமகன் என்பதால் நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மேலும், வழக்கை தாமதப்படுத்த வேண்டும் என்றோ அல்லது இழுத்தடிக்க வேண்டும் என்ற எண்ணமோ தனக்கு இல்லை எனவும் எடப்பாடி பழனிசாமி அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

சார்ந்த செய்திகள்