பலத்த மழையின் காரணமாக மிளகாய் சேதமடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தென்காசி மாவட்டத்தின் சங்கரன்கோவில் பகுதிகளில் இன்று மாலை 5 மணியளவில் திடீரென காற்றும் சுழற்சியுமாய் கோடை மழை பெய்தது. குறிப்பாக மாவட்டத்தின் திருவேங்கடம் தாலுகா பகுதியான கரிசல்குளம், அழகாபுரி சத்திரகொண்டான் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை ஒரு மணி நேரம் சுழன்றடித்துப் பெய்தது. திடீர் மழைக் காரணமாக சாலைகளில் உள்ள மரங்கள் சாய்ந்தன. ஒரு சில மின் கம்பங்கள் சாயும் சூழலில் சரிந்து நின்றன. இதனிடையே அந்தப் பகுதிகளில் மானாவாரி வயல்களில் ஏக்கர் கணக்கில் அறுவடை செய்யப்பட்ட மிளகாய் வத்தல்கள் காயப்போட்டிருந்தது இந்த திடீர் மழைக் காரணமாக நனைந்து சேதமானது.
அதனைப் பாதுகாக்க முடியாமல் தவித்த கரிசல் குளத்தின் 63 வயதான முதியவர் சுப்பையா. “என்னோட காலத்தில இப்படி ஒரு காத்து மழையை பாத்ததில்ல. காத்தும் மழையும் ஒன்னா சேர்ந்து அடிச்சதுல மிளகாய் சேதமாயிருச்சி. குவிண்டால் 23 ஆயிரம் விலை போகிற இந்த மிளகாய் 11 ஆயிரம் தான் விலையாகும். இந்த தேவையில்லாத மழையால என்னயப் போல விவசாயிகளுக்கு பெருத்த நட்டம்” என்றார் வேதனையோடு.