திருக்காரவாசல் காத்திருப்பு போராட்டம் 30 ம் தேதி முதல் பகலிலும் தீவிரமடைந்துள்ளது. 29 ம் தேதி இரவு முதல் காத்திருப்பு போராட்டத்தில் போராட்டக் குழு நிர்வாகிகள் 12 பேரை கைது செய்யப்பட்டதை தொடரந்து போராட்டக்களம் தீவிரமடைந்துள்ளது.
திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசலில் துவங்கி திருக்குவளை, புஷ்பவனம் ,வேளாங்கண்ணி, காமேஸ்வரம் , வேட்டைக்காரன் இருப்பு,உள்ளிட்ட பல இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு திருக்காரவாசல் என்கிற திட்டத்தை நாசகார வேதந்தா நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது மத்திய அரசு.
இதனை கண்டித்து கடந்த ஒரு வார காலமாக நாகை,திருவாரூர் மாவட்டங்களில் போராட்டங்கள் நடந்தபடியே இருக்கிறது. ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக போராட்டக் குழு அமைத்து விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் பி,ஆர் பாண்டியன் தலைமையில் குடியரசு தினத்தன்று உண்ணாவிரதப் போராட்டத்தையும் நடத்தினர். அறுவடை காலம் என்பதால், ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிரான போராட்டத்தை இரவு நேர போராட்டமாக அறிவித்து நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் 29ஆம் தேதி இரவு போராட்டத்தில் இருந்த போராட்டக்குழுவினர் 12 பேரை அதிரடியாக கைது செய்துள்ளதுகாவல்துறை. இதை அறிந்த மக்கள் 200 பெண்கள் உட்பட 500க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு பகலிலும் போராட்ட களத்திற்கு வந்தனர்.
கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட முயன்றநிலையில், திருவாருர் டிஎஸ்பி தலைமையிலான போலீசார் போராட்டக் குழுவினரோடு பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது" கைது செய்யப்பட்டுள்ள அனைவரையும் நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும், பாராளுமன்ற கூட்டத்தில் கொள்கை பூர்வமாக கைவிடும் வரையில் காலை முதல் இரவு 10 மணி வரை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட அனுமதிக்க வேண்டும்". என்பன உள்ளிட்ட நிபந்தனைகளை போராட்டக்குமுவினர் முன்வைத்தனர்.
அதனை ஏற்றுக்கொண்ட காவல் துறையினர் "இரவு 9 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படும் எனவும், கைது செய்யப்பட்ப அனைவரையும் விடுவிப்பதாக கூறி விடுவித்தனர்". இதனை ஏற்றுக்கொண்ட போராட்டக் குழுவினர் அமைதியான முறையில் பகலிலேயே போராட்டத்தை தொடர்ந்துள்ளனர்.