தமிழக விவசாய நிலங்களை பாழ்படுத்தும் மத்திய அரசின் ஹைட்ரோகார்பன், மீத்தேன் திட்டங்களுக்கு எதிரான போராட்டங்கள் தமிழகத்தில் உயிர்ப்புடன் இருக்கிறது. ஹைட்ரோகார்பன் திட்டங்களை தமிழகத்தில் அமல்படுத்தும் போது தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறையின் அனுமதியை பெற வேண்டும் என்கிற சட்டவிதியால் திட்டத்தை நேரடியாக நடைமுறைக்கு கொண்டு வர மத்திய பாஜக அரசு பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வந்தது. இந்த நிலையில், ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டும் என்கிற விதியை ரத்து செய்திருக்கிறது மத்திய அரசு. இதனை தமிழக அரசியல் கட்சிகளும் விவசாய அமைப்புகளும் கண்டித்து வருகின்றன.
இது குறித்து கண்டன அறிக்கை வெளியுட்டுள்ள மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா, ‘’ மண்ணை மலடாக்கி விவசாய பூமியை நிர்மூலமாக்கும் ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கான அனுமதியை எளிமையாக்க மத்திய அரசு முடிவெடுத்து தற்போது ஹைட்ரோகார்பன் போன்ற நாசகார திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதியும், பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தவும் தேவையில்லை என அறிவித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. காவிரி பாசனப் பகுதிக்கு பெரும் பேரழிவை உண்டாக்கும்.
ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதியும், மக்களிடம் கருத்தும் தேவையற்றது என்கிற மத்திய அரசின் முடிவு, பெரும் முதலாளிகளுக்குச் சிவப்புக் கம்பளம் விரித்து நாட்டின் பசுமையைப் பாழாக்கும் செயலாகும். அனைத்துத் துறையிலும் மக்களுக்கு விரோதமான திட்டங்களைக் கொண்டு வரும் மத்திய பாஜக அரசு, தமிழகத்திலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி அளித்து வருவதை ஆளும் அதிமுக அரசு அமைதியாக வேடிக்கைப் பார்த்து வருகிறது. ஹைட்ரோகார்பன் திட்டத்தைத் தமிழகத்தில் அனுமதிக்கமாட்டோம் என்று சட்டமன்றத்தில் வாக்களித்த அதிமுக அரசு , அது தொடர்பாக எவ்விதமான அடுத்தகட்ட நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாதது கண்டனத்திற்குரியது.
எனவே, காவிரிப் பசன பகுதிகளைப் பெரிதும் பாதிக்கும் ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்குத் தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுத்து மத்திய அரசிற்கு அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும் எனவும், காவிரி பாசன பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் பகுதியாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்திருக்கும் மத்திய அரசின் செயல் மிகவும் கண்டனத்திற்குரியது ‘’ என சுட்டிக்காட்டியுள்ளார்.