கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது புல்லூர் கிராமம். இந்த கிராமத்தில் மங்கலம்பேட்டை சாலையில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தவர் ரமணி (32). இவர் விருத்தாசலத்தில் உள்ள ஒரு வங்கியில் இன்சூரன்ஸ் பிரிவு ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு கடந்த எட்டு வருடங்களுக்கு முன்பு கோயம்புத்தூரில் ஒரு வாலிபருடன் திருமணம் நடைபெற்று உள்ளது. அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து வந்து வசித்து வந்துள்ளார்.
தினமும் உளுந்தூர்பேட்டையில் இருந்து ஆட்டோவில் செல்லும் போது பாண்டூர் கிராமத்தைச் சேர்ந்த அசோக் (33) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இதில் அவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் 20ஆம் தேதி காலை ரமணியின் பெற்றோர் அவருடைய செல்போனுக்கு தொடர்பு கொண்டுள்ளனர். செல் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்ட நிலையில் இருந்துள்ளதால் அவர்கள் நேராக வீட்டிற்கு வந்து பார்த்துள்ளனர். வீடு பூட்டி இருந்ததால் ரமணியை பெற்றோர் மற்றும் உறவினர்கள் தேடி வந்துள்ளனர். இந்த நிலையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்ட நிலையில் இன்று காலை ரமணியின் வீட்டுக்குச் சென்ற பெற்றோர் மற்றும் உறவினர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது ஒரு அறையிலிருந்த கட்டிலில் ரமணி படுகொலை செய்யப்பட்டுக் கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
முகம் முழுவதும் சிதைக்கப்பட்ட நிலையில் ரத்த காயத்துடன் ரமணி சடலமாகக் கொலை செய்யப்பட்டு இருப்பது குறித்து எடைக்கல் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். விரைந்து சம்பவ இடத்துக்குச் சென்ற இன்ஸ்பெக்டர் வீரமணி மற்றும் போலீசார் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
வீட்டில் இருந்த 25 பவுன் நகை மற்றும் முக்கிய ஆவணங்களுடன் ரமணியின் கணவர் அசோக் தலை மறைவானதால் போலீசார் அவரை தேடி வந்தனர். 48 மணி நேரத்துக்குள் தலைமறைவாக இருந்த ரமணியின் கணவர் ஆட்டோ டிரைவர் அசோக்கை போலீசார் கைது விசாரித்தனர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளது.
அதில், ‘ரமணி தன்னை திருமணம் செய்வதற்கு முன்பாக இருவரை திருமணம் செய்து ஏமாற்றியுள்ளார்.என்னிடம் ஏற்கனவே திருமணம் ஆனதை மறைத்து ஏமாற்றி தன்னை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு திருந்தாமல் உதவி காவல் ஆய்வாளர் நந்தகோபால், காவலர் பிரபாகரன் உட்பட பல ஆண்களுடன் திருமணத்தை மீறிய உறவு வைத்திருந்தார். அது குறித்து எனக்குத் தெரியவந்தவுடன் அவருக்கு நான் அறிவுரை கூறி திருந்துமாறு கூறினேன். அதனால் அவர் என்னை அடி ஆட்களைக் கொலை செய்து விடுவதாக மிரட்டினார். அதனால் வேறு வழியின்றி ரமணியை தீர்த்துக் கட்டினேன்’ என அசோக் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து வங்கி பெண் அதிகாரியான தனது மனைவி ரமணியை அடித்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட அசோக் உளுந்தூர்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.