சேலம் அருகே, தன் மனைவியோடு குடும்பம் நடத்தியதோடு வீட்டுக்கு எதிரிலேயே குடித்தனம் புகுந்த நண்பனை, இளைஞர் ஒருவர் சரமாரியாகக் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலத்தை அடுத்த கருப்பூர் வெள்ளைக்கல்பட்டியைச் சேர்ந்தவர் பாலமுருகன் (34). கார் ஓட்டுநர். இவருக்குத் திருமணமாகி மனைவியும் இரண்டு வயதில் ஆண் குழந்தையும் உள்ளனர். அதே பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (36). கட்டடத் தொழிலாளியான இவரும் பாலமுருகனும் நண்பர்கள். இதனால் அடிக்கடி பாலமுருகனின் வீட்டுக்குச் சென்று வந்துள்ளார் மணிகண்டன். இதில், அவருடைய மனைவிக்கும் மணிகண்டனுக்கும் நெருக்கமான தொடர்பு ஏற்பட்டது. இந்த தொடர்பு அவர்களுக்குள் திருமணத்தை மீறிய உறவாக மாறியது. இதையறிந்த பாலமுருகன், தன் மனைவியையும் நண்பனையும் எச்சரித்தார். ஆனால், தகாத உறவைக் கைவிடாமல் தொடர்ந்து ரகசியமாகச் சந்தித்து வந்துள்ளனர். இந்நிலையில் இரண்டு மாதத்திற்கு முன்பு, மணிகண்டனும் பாலமுருகன் மனைவியும் வீட்டை விட்டு வெளியேறிவிட்டனர்.
வெளியூரில் வசித்து வந்த அந்த ஜோடி, சில நாள்களுக்கு முன்பு பாலமுருகனின் வீட்டிற்கு எதிரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து குடி புகுந்தனர். இதனால் பாலமுருகனின் இரண்டு வயது ஆண் குழந்தை, எதிர் வீட்டில் வசிக்கும் தன் தாயைப் பார்க்க அங்கு அடிக்கடி சென்று வந்தது. இதைப் பார்த்து பாலமுருகன் மிகவும் மன வேதனை அடைந்தார். மனைவியுடன் குடும்பம் நடத்தியதோடு, தன் வீட்டுக்கு எதிரிலேயே அவருடன் மணிகண்டன் குடும்பம் நடத்தி வருவது பாலமுருகனுக்குள் கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து ஜூன் 7 ஆம் தேதி பாலமுருகன், அவருடைய தந்தை சுப்ரமணி, பெரியப்பா கிருஷ்ணன் ஆகியோர் மணிகண்டனின் வீட்டுக்குச் சென்று, வீட்டை விட்டு வெளியேறிப் போன நீங்கள், இப்போது ஏன் இதே இடத்துக்கு வந்து எங்களுக்கு பிரச்சினையை ஏற்படுத்துகிறீர்கள்? என்று கேட்டுள்ளனர்.
அப்போது இருதரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த பாலமுருகன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மணிகண்டனின் வயிறு, தோள் பட்டையில் சரமாரியாகக் குத்தினார். அவர் நிலை தடுமாறி கீழே விழுந்ததை அடுத்து பாலமுருகனும் அவருடன் வந்தவர்களும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அக்கம்பக்கத்தினர் மணிகண்டனை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கருப்பூர் காவல்நிலைய காவல்துறையினர் பாலமுருகன், அவருடைய தந்தை, பெரியப்பா ஆகியோர் மீது ஆயுதத்தால் தாக்கியது, கொலை மிரட்டல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். முதல்கட்டமாக பாலமுருகனை கைது செய்துள்ளனர். மற்ற இருவரையும் தேடி வருகின்றனர்.