சேலம் அருகே, முறையற்ற உறவுக்கு இடைஞ்சலாக இருந்ததால், ஆண் நண்பருடன் சேர்ந்து மனைவியே கணவனை தீர்த்துக்கட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மணியனூரைச் சேர்ந்தவர் செந்தில்முருகன் (46). லாரி ஓட்டுநர். இவருடைய மனைவி ஜோதி (36). இவர்களுக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக செந்தில்முருகனை அவருடைய மனைவி கடந்த ஐந்து ஆண்டுக்கு முன்பு பிரிந்து சென்று விட்டார். மகன், மகள்களுடன் ஆட்டையாம்பட்டி அருகே சென்னகிரியில் உள்ள பெற்றோர் வீடு அருகே தனியாக வீடு எடுத்து வசிக்கிறார்.
மனைவி பிரிந்து சென்று விட்டாலும் செந்தில்முருகன் அவ்வப்போது தன் குழந்தைகளை பார்த்துவிட்டு வருவார். செப். 24ம் தேதி அவர் குழந்தைகளைப் பார்த்துவிட்டு வருவதற்காக சென்னகிரிக்குச் சென்றவர், அதன்பின் சேலம் திரும்பவில்லை. இந்நிலையில் ஜோதியின் வீட்டில் செந்தில்முருகன் உடலில் ரத்தக் காயங்களுடன் இறந்து கிடப்பதாக அவருடைய தாயார் சின்னப்பிள்ளைக்கு தகவல் கிடைத்தது.
அதிர்ச்சி அடைந்த அவர், இதுகுறித்து ஆட்டையாம்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர் நிகழ்விடம் சென்று சடலத்தைக் கைப்பற்றினர். உடற்கூராய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு சடலம் அனுப்பி வைக்கப்பட்டது. மர்ம நபர்கள் செந்தில்முருகனை அடித்துக் கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
செந்தில்முருகனின் மனைவி ஜோதிக்கு, சென்னகிரியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சுரேஷ் (46) என்பவருடன் முறையற்ற உறவு இருந்து வந்தது. அவர்கள்தான் செந்தில்முருகனை அடித்துக் கொலை செய்திருப்பது தெரியவந்தது. அவர்கள் இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
செந்தில்முருகனுக்கும், ஜோதிக்கும் திருமணமாகி 16 ஆண்டுகள் ஆகின்றன. உள்ளூர் பண்டிகை, வார இறுதி நாட்களில் குழந்தைகளுடன் ஜோதி தாய் வீட்டிற்கு வந்து செல்வார். அவ்வாறு வந்து சென்றபோது சுரேஷூடன் ஜோதிக்கு பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறியது. இதையறிந்த செந்தில்முருகன் மனைவியைக் கண்டித்துள்ளார். இதனால்தான் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. அதன்பிறகே ஜோதி கணவரை பிரிந்து சென்னகிரியில் தனியாக வீடு எடுத்து தங்கினார்.
இதனையடுத்து சுரேஷ் அடிக்கடி ஜோதியைப் பார்க்க அந்த வீட்டிற்கு வந்து சந்தோஷமாக இருந்துள்ளார். என்னதான் மனைவி பிரிந்து சென்று விட்டாலும், குழந்தைகளைப் பார்க்கும் சாக்கில் சென்னகிரிக்குச் செல்லும் செந்தில்முருகன், சுரேஷூடனான தொடர்பை விட்டுவிடுமாறு ஜோதியை மிரட்டி வந்துள்ளார். மேலும், உன்னால் குழந்தைகளின் எதிர்காலமும் பாழாகிவிடும். சுரேஷை சந்திப்பதை உடனடியாக நிறுத்தாவிட்டால் கொன்று விட்டு ஜெயிலுக்குப் போகவும் தயங்க மாட்டேன் என்றும் கடுமையாக எச்சரித்துள்ளார்.
செந்தில்முருகன் உயிருடன் இருக்கும் வரை தன்னால் சந்தோஷமாக வாழ முடியாது எனக்கருதிய ஜோதி, கணவரை தீர்த்துக்கட்ட முடிவெடுத்தார். தனது திட்டத்தை காதலன் சுரேஷிடமும் கூறவே, அவரும் ஒப்புக்கொண்டார். இந்நிலையில், சம்பவத்தன்று செந்தில்முருகன் ஜோதி வீட்டிற்குச் சென்றுள்ளார். குடிபோதையில் இருந்த அவர் மீணடும் ஜோதியிடம் தகராறில் ஈடுபட்டார். ஏற்கனவே சுரேஷூக்கு தகவல் அளித்து வீட்டிற்கு வரவழைத்து இருந்தார் ஜோதி.
செந்தில்முருகன் அவரது மனைவியைத் தாக்குவதைப் பார்த்த சுரேஷ், மரக்கட்டையால் அவரை சரமாரியாக தாக்கியதில் நிலை குலைந்து கீழே விழுந்தார். பின்னர் அவர்கள் இருவரும் மரக்கட்டையால் செந்தில்முருகனை தாக்கி கொலை செய்திருப்பது விசாரணையில் தெரியவந்தது. இந்த விவரங்களை அவர்கள் இருவரும் வாக்குமூலத்திலும் ஒப்புக்கொண்டுள்ளனர்.
கைதான இருவரையும் நீதிமன்ற உத்தரவின் பேரில், காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.