திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே தாசிரிபட்டி பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (30). இவர் அந்தப் பகுதியில் வேன் டிரைவராகப் பணியாற்றி வருகிறார். இவருக்குக் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வினோதினி (25) என்ற பெண்ணுடன் திருமணமான நிலையில், இவர்களுக்கு 8 மாத பெண் குழந்தை உள்ளது.
இவர்கள் கடந்த ஒரு மாத காலமாக வேடசந்தூரில் உள்ள உசேன் ராவுத்தர் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், கிருஷ்ணமூர்த்திக்கும் அவரது மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக கணவருடன் கோபித்துக் கொண்டு வினோதினி தனது குழந்தையுடன் கடந்த ஐந்து நாட்களுக்கு முன் அவரது தாய் வீட்டிற்குச் சென்றுள்ளார். தனியாக இருந்த கிருஷ்ணமூர்த்தி விரக்தியில் இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் ( ஜூலை 22) அன்று தனது வீட்டில் தூக்கு மாட்டித் தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்துத் தகவல் அறிந்த வேடசந்தூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அங்கு வந்த காவல்துறையினர், தற்கொலை செய்து கொண்ட கிருஷ்ணமூர்த்தியின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து, இந்தச் சம்பவம் குறித்துக் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அவர்கள் நடத்திய அந்த விசாரணையின் அடிப்படையில் கிருஷ்ணமூர்த்தியின் செல்போனைச் சோதனை செய்தனர். அந்தச் சோதனையில், தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு கிருஷ்ணமூர்த்தி செல்போனில் தனது இறப்பிற்கான காரணம் குறித்து வீடியோவில் பேசிப் பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில், தனது மனைவி வினோதினி தான் சேமித்து வைத்திருந்த 3 லட்ச ரூபாயை எடுத்துச் சென்றுள்ளார். மேலும், தனது குழந்தையை நன்றாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் பேசியுள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.