மனைவியிடம் நான் உன்னுடைய தங்கையை விரும்புகிறேன் என்று கூறிய கணவனுக்கு விரும்பிய பெண்ணை மனைவியே திருமணம் செய்து வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசம் மாநிலத்தில், பிந்த் என்ற மாவட்டம் உள்ளது. அங்கு நடந்த ஒரு திருமண விழாவில் இரு பெண்களை ஒரே மணமகன் திருமணம் செய்த சம்பவம் நடந்துள்ளது. மத்திய பிரதேசத்தில் பிந்த் மாவட்டத்தில் வசிப்பவர் திலீப். இவருடைய மனைவி வினிதா. கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பே திலீப் என்பவர் வினிதா என்ற பெண்ணை திருமணம் செய்து இருக்கின்றார். இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில், திலீப் வினிதாவின் உறவினர் பெண்ணான ரக்ஷனா என்ற பெண்ணை விரும்பியதாக சொல்லப்படுகிறது. இதை தனது மனைவியிடம் திலீப் கூறியுள்ளார். இதற்கு திலீப்பின் மனைவி சம்மதம் தெரிவித்து திருமண ஏற்பாடுகளை செய்து வந்துள்ளார்.
இதனையடுத்து ரக்ஷனாவிற்கு மாலை மாற்றி திருமணம் செய்தது மட்டுமில்லாமல் முதல் மனைவி வினிதாவிற்கும் தங்களுடைய குழந்தைகள் முன்பே மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டு இருக்கின்றார் திலீப். இந்த திருமணம் பற்றி திலீப்பின் முதல் மனைவி வினிதா கூறிய போது, "எனக்கு சில ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லாத காரணத்தால் என்னுடைய மூன்று குழந்தைகளைக் கவனித்துக் கொள்ள முடியவில்லை. அதோடு என்னுடைய கணவனையும் கவனிக்க முடியவில்லை. அதனால் தான் என் தங்கையை எனது கணவருக்கு திருமணம் செய்ய சம்மதித்தேன்." என்று கூறியுள்ளார். மேலும் வேறு பெண்ணை திருமணம் செய்து வைத்திருந்தால் எனது குழந்தைகளை சரியாக கவனிக்க மாட்டார்கள். எனது தங்கை என்றால் எனது குழந்தையை அவள் குழந்தை போல் நினைத்து கவனித்து கொள்வாள். மேலும் குடும்பத்திலும் எந்த பிரச்னையும் வராது என்றும் கூறியுள்ளார். அதோடு எனது கணவருக்கும் அவளை பிடித்து போனதால் திருமணத்திற்கு சம்மதம் உடனே தெரிவித்து விட்டேன் என்று கூறியுள்ளார்.
மேலும் இந்த சம்பவம் குறித்து திலீப் கூறும் போது, நீண்ட காலமாக ரக்ஷனாவை நான் விரும்பி வந்தேன். அவரை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாக என்னுடைய மனைவியிடம் நான் தெரிவித்தேன். அவரும் அதற்கு சம்மதித்தார் என்று கூறியுள்ளார். அக்கா மற்றும் தங்கையை ஒருவரே திருமணம் செய்துள்ள சம்பவம் பிந்த் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.