கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த அரசு சார்பில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இயற்கை ஆர்வலர்கள் சிலர் நம்மாழ்வார் வழி்யில் கிருமி நாசினி தயாரித்து வீடுகளூக்கு தெளித்து வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அருகிலுள்ள பெரியதிருக்கோணம் ஊராட்சிக்குட்பட்ட செட்டித்திருக்கோணம் கிராமத்தில் இயற்கை ஆர்வலர்கள், கிராமத்தின் சுமார் 300 வீடுகளிலும், தெருக்களிலும் சந்துக்களிலும் சாக்கடை தேங்கிய பகுதிகளிலும் வைரஸ் கிருமிகள் அண்டாமல் இருக்க இயற்கை முறையில் தயாரித்த கிருமி நாசினி மருந்துகள் தெளிக்கப்பட்டது.
இயற்கை முறையிலான கிருமி நாசினியில் வேப்பிலை, ஆடாதொடை இலை, நொச்சி இலை, மஞ்சள் தூள், உப்பு கரைசல் ஆகியவற்றை கலந்து தயாரிக்கப்பட்டது. இதனைத் தெளிக்கும் போது கசப்புத் தன்மை அதிகமாக இருப்பதால் தெளிப்பவர்களுக்கு நெடி ஏறும். எனவே நெடி ஏறுவதனால் பயப்படத்தேவையில்லை. மேலும் இது குறித்து அவர்கள் கூறுகையில் 3 நாட்களுக்கு ஒரு முறை கைத்தெளிப்பான் மூலம் தெளிக்கலாம் என முடிவு செய்துள்ளதாகவும் அருகருகே உள்ள கிராமங்களில் உள்ள தன்னார்வலர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தி இயற்கையான கிருமி நாசினி தயாரிப்பு அனுபவங்களை பகிர்ந்து கொண்டு தூய்மை பணியில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர்.
இயற்கையான முறையில் நம்மாழ்வார் வழியில் எங்களது பணியை தொடர்வதில் கிராம மக்கள் அனைவரும் இயற்கை கிருமி நாசினி தயாரித்து தூய்மை பணியில் ஈடுபட்டதை மனதார பாராட்டினர். மேலும் இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், சுற்றுப்புறச் சூழலை பாதிக்காத கிருமி நாசினிப் பயன்பாட்டை அனைத்து கிராமங்களிலும் முன்னெடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.