கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை பகுதிக்கு அருகே அமைந்துள்ளது குடிசாகனபள்ளி கிராமம். இந்த பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி. இவருக்கு 35 வயதாகிறது. தான் வசிக்கும் சுற்று வட்டாரப் பகுதிகளில் டிரைவராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில், பாலாஜிக்கு அதே ஊரைச் சேர்ந்த ராதா என்ற பெண்ணுடன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மேலும், பாலாஜி தன்னுடைய டிரைவர் தொழிலில் கிடைக்கும் பணத்தை வைத்து தனது குடும்பத்தை பாதுகாத்து வந்தார்.
ஆரம்பத்தில் ஒற்றுமையாக இருந்த இவர்களது குடும்பத்தில், காலப்போக்கில் சிறு சிறு விரிசல்கள் ஏற்பட்டு வந்துள்ளது. அதில், பாலாஜிக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அப்போதெல்லாம் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள், உறவினர்கள் என கணவன் மனைவியின் சண்டையை தீர்த்து வைப்பது வழக்கம். இந்நிலையில், பாலாஜிக்கும் அவரது மனைவிக்கும் ஏற்பட்ட தகராறு திடீரென உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
ஒருகட்டத்தில், விரக்தியடைந்த பாலாஜியின் மனைவி தனது குடும்பத்தை விட்டுப் பிரிந்து இரண்டு மகன்களுடன் தனியாக வாழ்ந்து வருகிறார். இதனிடையே, தன்னுடைய மனைவி தனியாக வாழச் சென்றதால் விரக்தியில் இருந்த பாலாஜி தனிமையிலேயே இருந்துள்ளார். இதையடுத்து, பாலாஜியை விட்டு அவர் பிரிந்து சென்று எட்டு ஆண்டுகள் ஆகிறது. இதற்கிடையில், பாலாஜிக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. அவர் அடிக்கடி மது குடிப்பது வழக்கம். இத்தகைய சூழலில், மது போதைக்கு அடிமையான பாலாஜி அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டுக்கு வருவார் எனவும் கூறப்படுகிறது.
இத்தகைய சூழலில், கடந்த 16 ஆம் தேதி காலை பாலாஜியின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதையடுத்து, அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் வீட்டருகே சென்றபோது அந்த வீடும் வெளிப்புறமாக பூட்டிய நிலையில் காணப்பட்டுள்ளது. இந்நிலையில், இச்சம்பவம் குறித்து பேரிகை காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அங்கிருந்த பாலாஜி உறவினர்களின் உதவியுடன் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர்.
அப்போது, அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது பாலாஜி பாதி அழுகிய நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்துள்ளார். ஒருகணம், இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள், பாலாஜியை பார்த்து கண்ணீர் விட்டுக் கதறி அழுதனர். அதன்பிறகு, பாதி அழுகிய நிலையில் இருந்த பாலாஜியின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதே வேளையில், பாலாஜியின் உடலில் இருந்த காயங்களை வைத்துப் பார்க்கும்போது அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பதை போலீசார் உறுதி செய்தனர். இந்நிலையில், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பேரிகை போலீசார், இந்த கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாலாஜியை வேறு யாராவது அடித்துக் கொலை செய்துவிட்டுத் தப்பிச் சென்றார்களா? அல்லது முன்விரோதம் காரணமா? அவருக்கு எதிரிகள் யாரேனும் இருக்கிறார்களா? என்ற பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். தற்போது, மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள பகுதியில் பூட்டிய வீட்டில் டிரைவர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பேரிகை பகுதி மக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.