நெல்லையின் மேலாப்பாளையத்தைச் சேர்ந்த மகபூப்ஜான் மகன் இம்ரான்கான் ரியல் எஸ்டேட் தொழிலில் இருப்பவர். இவரது மனைவி நெல்லை டவுண் சேர்ந்த ஹசினா பேகம். இந்த தம்பதியருக்கு 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதனிடையே தம்பதியருக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 10 நாட்களுக்கு முன்பு கணவர் வீட்டை விட்டு வெளியேறிய ஹசினா பேகம், டவுணிலிருக்கும் தன் தாய் வீட்டிற்கு சென்று விட்டதாகத் தெரிகிறது.
இந்தச் சூழலில், தனது மருமகளின் உயிருக்கு ஆபத்து உள்ளதால் அவரது பெற்றோர் வீட்டிலிருப்பதே அவருக்கு பாதுகாப்பு. எனவே அவரை மேலப்பாளையத்திற்கு வரவேண்டாம் என போலீசார் அறிவுறுத்த வேண்டும் என்று ஹசினா பேகத்தின் மாமனார் மகபூப்ஜான் மேலப்பாளையம் போலீசில் புகார் மனு அளித்திருக்கிறார். இதையடுத்து போலீசார் ஹசீனா பேகத்திடம் விசாரணை நடத்திவிட்டு அவரது தம்பியுடன் வீட்டிற்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
இந்நிலையில் தன் மாமனார் வீட்டிற்கு வந்த இம்ரான்கான், அங்கிருந்த தன் மனைவியிடம், மனசுக்கு கஷ்டமாயிருக்கு. பேட்டையிலுள்ள தர்ஹாவுக்கு சென்று விட்டு வருவோம் என்று அழைக்க, அதை நம்பிய ஹசினா பேகம் அவருடன் பைக்கில் சென்றிருக்கிறார். அங்கு தன்னுடன் வாழ வருமாறு மனைவியை இம்ரான்கான் அழைக்க, அதற்கு அவர் மறுக்கவே, அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதனால் ஆத்திரமான இம்ரான்கான், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் திடீரென்று ஹசினா பேகமை சரமாரியாக குத்தியிருக்கிறார். இதில் கதறிய ஹசினா பேகம் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியாகி இருக்கிறார். பின்னர் இம்ரான்கான் டவுண் காவல் நிலையத்தில் சரணடைந்திருக்கிறார்.
தகவலின் பேரில் சம்பவ இடம் வந்த டவுண் உதவி கமிசனர் சுப்பையா, பேட்டை இன்ஸ்பெக்டர் ஷோபா ஜென்சி உள்ளிட்ட போலீசார் ஹசினா பேகத்தின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.