அந்தோனி
கடந்த செப்.12-ந்தேதி மாலையும் கழுத்துமாய் நின்றிருந்தான் கதிரவன். இன்றும் அவன் கழுத்தில் மாலைகள். ஆனால் உடம்பில் உயிர்தான் இல்லை. யார் இந்த கதிரவன்? மனைவியின் சதியறியாது பிணமாகிப் போனவன்.!
அருப்புக்கோட்டையை சேர்ந்த கதிரவனுக்கும், தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரத்தை சேர்ந்த விஜயசுந்தரம் என்பவரது மகள் வினோதினி (எ) அனிதாவுக்கும் செப். 12-ல் திருமணம் முடிந்தது. கதிரவன் தரமணி டிசிஎஸ்-ல் வேலை பார்ப்பவர் என்பதால், திருமணத்திற்கு புது மனைவியோடு பல்லாவரத்திற்கு குடிவந்தார். அந்த மகிழ்வான வாழ்க்கை ஒருமாதம் கூட நினைக்கவில்லை.
கடந்த 13-ந் தேதி திருவான்மியூர் கடற்கரைக்கு கணவனை அழைத்து வந்த வினோதினி, முன் கூட்டியே தனது கல்லூரி காதலன் அந்தோனிக்கும் தகவல் கொடுத்திருக்கிறார். ஏற்கனவே வகுத்த திட்டப்படி, கதிரவன் கண்ணில் துணியை கட்டிக் கொண்டு வினோதினி கண்ணாமூச்சி விளையாட்டு ஆட, கண்ணிமைக்கும் நேரத்தில் கதிரவனின் பின் தலையில் சுத்தியாலும், கத்தியாலும் தாக்கிவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டான் அந்தோனி. பின்னர் வழிப்பறிக் கொள்ளையர்கள் தமது கணவனை தாக்கிவிட்டு, தனது 12 சவரன் நகையை பறித்து சென்றுவிட்டதாக நாடகம் ஆடினாள் வினோதினி. ஆனால், போலீஸாரின் கிடுக்குப்பிடி விசாரணையில், உண்மை வெளிவந்துவிட்டது.
சத்தமில்லாமல் சம்பவத்தை முடித்த அந்தோனி, மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் பதுங்கியிருந்தபோது போலீஸாரிடம் சிக்கிவிட்டான். "ஏற்கனவே கொடைக்கானலுக்கு அவர்கள் தேனிலவுக்கு சென்றபோது ஸ்கெட்ச் போட்டேன், ஆனா தோல்வியில் முடிச்சிருச்சு. இப்ப இது 2வது முயற்சி என்று சொல்லி" போலீஸாரையே மிரள வைத்திருக்கிறான். 2 நாள் மருத்துவ சிகிச்சையில் கண்விழிக்காமல் இருந்த கதிரவன், இப்போது நிரந்தரமாக கண் மூடிவிட்டான். அந்தோனிக்கும் வினோதினிக்கும் ஏற்கனவே பழக்கம் இருந்தது, பெண் வீட்டாருக்கு தெரிந்திருக்கிறது. இருந்தாலும் சாதி குறுக்கே நின்றதால், பெண்ணின் விருப்பத்திற்கு மாறாக வேறு ஒரு மாப்பிள்ளைக்கு கட்டிவைத்தனர்.
இப்போது ஏதுமறியா அப்பாவி, பரிதாபமாக உயிரிழந்துவிட்டான். காதலை விட கள்ளக் காதலுக்கு வீரியம் அதிகம் என்பதை உணர்த்தி விட்டாள் வினோதினி. அதேபோல், அவள் நினைத்தையும் சாதித்துவிட்டாள். ஆம், கணவனை கொல்ல நினைத்தாள், அது நிறைவேறி விட்டது. அடுத்து.....?