பெரம்பூர் ஹைதர் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் சங்கீதா (25, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு கன்னிகாபுரம் பகுதியைச் சேர்ந்த பாபு என்பவருடன் கடந்த 9 வருடங்களுக்கு முன் திருமணம் ஆனது. இவர்களுக்கு 5 மற்றும் 2 வயதில் மகன்கள் உள்ளனர். இந்த நிலையில், சங்கீதாவுக்கும், பாபுவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து, கடந்த 6 மாதங்களாக சங்கீதா தனது மகன்களுடன் தாய் வீட்டில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில், சங்கீதாவுக்கு தெரியாமல் பாபு வியாசர்பாடி, ஏரிக்கரை பகுதியைச் சேர்ந்த வேறு ஒரு பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு, இந்த விவரம் சங்கீதாவுக்கு தெரியவந்துள்ளது. கடந்த 7 ஆம் தேதி புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு சென்ற சங்கீதா, கணவர் மீது புகார் அளித்துள்ளார். இதை அறிந்த காவல்துறையினர், பாபுவைக் காவல் நிலையத்துக்கு அழைத்து விசாரணை நடத்தினர்.அந்த விசாரணையில், சங்கீதாவுடன் வாழ விருப்பமில்லை அதனால், சங்கீதாவுக்கு ரூ.5 லட்சம் ஜீவனாம்சம் தருவதாகக் கூறி காவல் நிலையத்தில் பாபு எழுதி கொடுத்துச் சென்றுள்ளார். தனது இரு மகன்களின் எதிர்காலம் கருதி, சங்கீதா அதற்கு சம்மதம் தெரிவித்து பாபுவை விட்டுப் பிரிவதாக ஒப்புக்கொண்டார்.
ஆனால், சங்கீதாவுக்கு பணம் தருவதாக சொன்ன பாபு பல நாட்களாக பணம் தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதுகுறித்து, சங்கீதா புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல்நிலையத்தை மீண்டும் அணுகினார். ஆனால், அங்கு காவல்துறையினர் முறையான விசாரணை நடத்தவில்லை என்று கூறப்படுகிறது . இதனால் மனமுடைந்து போன சங்கீதா நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து பினாயிலை எடுத்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். வெளியே சென்ற சங்கீதாவின் தம்பி 2 மணி நேரம் கழித்து வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது மயங்கிய நிலையில் கிடந்த சங்கீதாவைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சங்கீதா சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரிடம் வாக்குமூலம் பெறுவதற்காக சென்னை பெருநகர 18 ஆவது நீதிமன்ற நடுவர் சுப்பிரமணி மருத்துவமனைக்கு சென்றுள்ளார். ஆனால், சங்கீதா உயிருக்கு ஆபத்தான நிலையில் மிகவும் கவலைக்கிடமாக இருப்பதால் அவரிடம் வாக்குமூலம் பெறாமல் திரும்பி சென்றுவிட்டார். இதுகுறித்து, ஓட்டேரி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையில், முதல் மனைவிக்கு தெரியாமல் இரண்டாம் திருமணம் செய்த பாபுவை காவல்நிலையத்தில் வைத்து முறையாக விசாரணை நடத்தவில்லை. அதனால்தான் சங்கீதா மனமுடைந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார் என்று சங்கீதாவின் குடும்பத்தினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.