Skip to main content

கடும் கட்டுப்பாட்டில் இமானுவேல் சேகரன் நினைவு தினம்..!

Published on 06/09/2018 | Edited on 06/09/2018
Sep 11 Immanuvel (27)


வருடம் தோறும் செப்டம்பர் 11ம் தேதியன்று பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு தினம் கொண்டாடப்படுவது வழக்கமான ஒன்று. இந்த தினத்தில் கூடும் கட்டுக்கடங்காத கூட்டத்தினை ஒழுங்குப்படுத்தும் பொருட்டு கடந்த 2013ம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் நந்தகுமார் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்தார். அவரைத் தொடர்ந்து வந்த அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் அதனையே பின்பற்றி வந்தனர். இந்நிலையில் வரும் செப்டம்பர் 11ம் தேதியன்று நடைபெறவுள்ள இமானுவேல் சேகரன் நினைவு தினத்திற்கு வருபவர்கள் பின்பற்ற வேண்டிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளார் மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ்.

"அஞ்சலி செலுத்த இராமநாதபுரம் மற்றும் பிற மாவட்டங்களிலிருந்து வருபவர்கள் சொந்த வாகனங்களில் மட்டுமே வர அனுமதிக்கப்படுகிறது. வாடகை வாகனங்கள் மற்றும் திறந்த வெளி வாகனங்களில் வர அனுமதி இல்லை. இரு சக்கர வாகனங்கள் டிராக்டர் டாடா ஏஸ் சைக்கிள் போன்ற வாகனங்களில் வர அனுமதி இல்லை. வாகனத்தில் பயணம் செய்வோர் விபரங்களை 08.09.2018 தேதிக்கு முன்பாக சம்பந்தப்பட்ட உட்கோட்ட அலுவலகங்களில் அளித்து வாகன அனுமதி சீட்டுபெற்றுக் கொள்ள வேண்டும். இதனை வாகனத்தில் முன்புற கண்ணாடியில் ஒட்ட வேண்டும். வாகன அனுமதிச் சீட்டு இல்லாத வாகனங்கள் பரமக்குடி செல்வதற்கு அனுமதிக்கப்படமாட்டாது. பிற மாவட்டங்களிலிருந்து சொந்த வாகனங்களில் வரும் நபர்கள் அந்தந்த மாவட்டங்களில் முறையான அனுமதி பெற்று வர வேண்டும். சொந்த வாகனங்களில் செல்பவர்கள் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே நினைவிடத்திற்கு வந்து செல்ல வேண்டும்.

வாகனத்தின் மேற்கூரையில் பயணம் செய்யக் கூடாது. வாகனத்தில் ஆயுதங்கள் ஏதும் எடுத்துச் செல்லக் கூடாது. வரும் வழித்தடங்களில் வெடி போடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். வாகனத்தில் ஒலி பெருக்கிகள் பொருத்திச் செல்லக் கூடாது. வாகனங்களில் சாதி மத உணர்வுகளைத் தூண்டும் வாசகங்கள் அடங்கிய பேனர்களைக் கட்டி வரவோ கோஷங்களை எழுப்பவோ கூடாது. பரமக்குடி நகருக்குள் சந்தைப் பேட்டை சந்திப்பு முதல் காட்டுப்பரமக்குடி வரை தேசிய நெடுஞ்சாலையில் எந்த ஒரு வாகனத்தையும் நிறுத்தி வைக்க அனுமதி கிடையாது. வாகனங்களில் வரும்பொழுது வரும் வழியில் போக்குவரத்திற்கு இடையூறு செய்யும் வகையில் வாகனங்களை நினைத்த இடங்களில் நிறுத்தக் கூடாது. அஞ்சலி செலுத்துவதற்காக கிராமங்களிலிருந்து பேருந்துகளில் வருபவர்கள் தங்கள் கிராமங்களிலிருந்து காலை 11.00 மணிக்குள் புறப்பட வேண்டும்.

பேருந்துகளில் பிளக்ஸ் போர்டு பேனர் கட்சி கொடிகள் மற்றும் ஒலிபெருக்கி ஆகியவற்றை பயன்படுத்தக் கூடாது. மேலும் ஜோதி தொடர்பான உபகரணங்களை பேருந்துகளில் எடுத்து வரக்கூடாது. பேருந்துகளில் படிக்கட்டு மற்றும் மேற்கூரையில் பயணம் செய்யக்கூடாது. பேருந்துகளில் அனைவரும் முறையாக பயணச் சீட்டு பெற்று வர வேண்டும். கூடுதல் பேருந்துகள் 11.09.2018 ஆம் தேதி ஒரு நாள் மட்டுமே இயக்கப்படும். தலைவர்கள் வரும்பொழுது உடன் 3 சொந்த வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படும் மேலும் தலைவர்களுக்கு ஒதுக்கப்பட்ட குறித்த நேரத்தில் அஞ்சலி செலுத்தி விட்டு செல்ல வேண்டும்.
 

Sep 11 Immanuvel (27)


நடைபயணமாக அஞ்சலி செலுத்த வரக்கூடாது. பரமக்குடி நகருக்குள் மட்டும் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் நடைபயணமாக செல்லலாம். ஜோதி முளைப்பாரி மற்றும் பால்குடம் ஆகியவற்றிற்கு அனுமதி இல்லை. நினைவிடத்திலிருந்து சுமார் 1 கி.மீ. தொலைவிற்குள் மட்டுமே எடுத்து வர அனுமதிக்கப்படும். சொந்த ஊரில் செப்டம்பர் 11-ஆம் தேதிக்கு முந்தைய தினமோ பிந்தைய தினமோ எவ்வித நிகழ்ச்சிகள் கொண்டாடவும் ஒலிபெருக்கி அமைப்பதற்கும் அனுமதி கிடையாது.

பிளக்ஸ் போர்டு மற்றும் சுவரொட்டிகள் ஆகியவை பரமக்குடி நகருக்குள் மட்டும் 3 நாட்களுக்கு (9-10-11ஆம் தேதிகளில்); மட்டுமே வைத்துக்கொள்ள அனுமதிக்கப்படும். மேலும் பிளக்ஸ் போர்டு வைப்பதற்கு முன்பாக பரமக்குடி சார் ஆட்சியர் அவர்களிடம் மனு அளித்து முன் அனுமதி பெற வேண்டும். பரமக்குடி சார் ஆட்சியர் அலுவகத்தில் இப்பணிக்கென நகராட்சிகாவல் துறை மற்றும் வருவாய்த் துறை அலுவலர்கள் நியமிக்கப்படுவார்கள். பிளக்ஸ் போர்டு வைக்க அனுமதி கோரி வரும் விண்ணப்பங்கள் முறையாகப் பரிசீலிக்கப்பட்டு அரசு விதிகள் மற்றும் தகுதியின் அடிப்படையில் விண்ணப்பம் அளித்த 24 மணி நேரத்திற்குள் உத்தரவுகள் வழங்கப்படும். பரமக்குடி நினைவிடத்தில் 11.09.2018 ஆம் தேதி அன்று மாலை 04.00 மணிக்குள் அனைத்து நிகழ்ச்சிகளையும் முடித்துக் கொள்ள வேண்டும். அஞ்சலி செலுத்த வருபவர்களில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் (Registered political parties ) தலைவர்களுக்கு மட்டும் நேரம் ஒதுக்கீடு செய்யப்படும். இதற்கு ஏதுவாக சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 08.09.2018 ஆம் தேதிக்கு முன்பாக விண்ணப்பத்தினை அளிக்க வேண்டும்." என்கின்றது ஆட்சியரின் விதிமுறைகள்.

இதே வேளையில், "இது எங்கள் சமூக மக்களை ஒடுக்கும் வழிமுறை இது என பல தரப்பிலிருந்து எதிர்ப்புக்கள் வந்த வண்ணம் உள்ளது." எனினும், கட்டுப்பாடுகளை செயல்படுத்த முழுவீச்சில் தயாராய் உள்ளது மாவட்ட நிர்வாகம்.

 

சார்ந்த செய்திகள்