Skip to main content

அண்ணியின் தூண்டுதல்; மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்த கணவன்

Published on 28/10/2022 | Edited on 28/10/2022

 

husband attempt his wife due dowry

 

விழுப்புரம் மாவட்டம் பிடாகம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித் குமார். இவருக்கும் பரமேஸ்வரி என்ற பெண்ணுக்கும் கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணமாகி இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில் அவர்களுக்கு குழந்தைகள் ஏதும் இல்லை. திருமணத்தின் போது பரமேஸ்வரிக்கு சீர்வரிசை சாமான்கள் மூன்று சவரன் நகை ஆகியவற்றை மட்டுமே அவரது பெற்றோர்கள் கொடுத்துள்ளனர்.

 

வரதட்சணையாக ரஞ்சித் குமாருக்கு இரு சக்கர வாகனம் வாங்கித் தருவதாக கூறியுள்ளனர். ஆனால் அதை இதுவரை வாங்கிக் கொடுக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ரஞ்சித் குமார் அவரது தாய் ராணி இருவரும் பரமேஸ்வரியின் பெற்றோர்களிடம் சென்று கூடுதலாக வரதட்சணை வாங்கி வரும்படி அவ்வப்போது கொடுமைப்படுத்தி வந்துள்ளனர்.

 

இந்த நிலையில் கடந்த 25ஆம் தேதி மது அருந்துவதற்காக மனைவி பரமேஸ்வரியிடம் ரஞ்சித் குமார் 500 ரூபாய் பணம் கேட்டுள்ளார். குடிப்பதற்கு பணம் தர முடியாது என்று பரமேஸ்வரி மறுத்துள்ளார். கோபத்துடன் தன் தாய் ராணியிடம் 500 ரூபாய் பணத்தை வாங்கிக் கொண்டு ரஞ்சித் குமார் டாஸ்மாக் கடைக்குச் சென்று மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது ரஞ்சித் குமாரின் அண்ணி கோமதி என்னுடைய திருமணத்தின் போது எனது பெற்றோர்கள் எனக்கு 15 பவுன் நகை வரதட்சணையாக கொடுத்தார்கள். அதுபோல் நீ ஏன் வாங்கி வரவில்லை என்று பரமேஸ்வரியிடம் சண்டை வளர்த்து வந்துள்ளார்.

 

அந்த நேரத்தில் போதையில் வீட்டுக்கு வந்த ரஞ்சித் குமார் மனைவியிடம் அண்ணி கோமதியின் தூண்டுதலின் பேரில் கூடுதல் வரதட்சணை வாங்கி வருமாறு தகராறு செய்துள்ளார். அப்போது பரமேஸ்வரி கணவரை எதிர்த்துப் பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கணவர் ரஞ்சித் குமார் மகேஸ்வரி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார். உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்த நிலையில் பரமேஸ்வரி வீதியில் அலறி அடித்துக் கொண்டு ஓடி உள்ளார்.இதைப் பார்த்து பதறிப்போன அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் பரமேஸ்வரியை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு  80 சதவீத தீக்காயங்களுடன் பரமேஸ்வரி உயிருக்குப் போராடி வருகிறார்.

 

இது குறித்த புகாரின் பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் ரஞ்சித் குமார், அவரது தாயார் ராணி, அண்ணி கோமதி ஆகிய மூன்று பேர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில் ரஞ்சித் குமார், அவரது தாய் ராணி ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். வரதட்சணை கேட்டு, கட்டிய மனைவியை உயிரோடு எரித்துக் கொலை செய்ய முயன்ற கணவன், அவரது தாயார், அண்ணி ஆகியோரின் செயல் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்