Skip to main content

சகிச்சுக்க முடியல... மனைவியை கிரிக்கெட் மட்டையால் அடிச்சு கொன்னுட்டேன்! சிக்கிய கணவர் அதிர்ச்சி வாக்குமூலம்!!

Published on 14/06/2022 | Edited on 14/06/2022

 

husband and wife incident police investigation in salem district

 

சேலத்தில், குழந்தை பிறக்காதது தொடர்பாக கணவன், மனைவிக்குள் ஏற்பட்ட தகராறின்போது, ஆத்திரம் அடைந்த கணவன், கிரிக்கெட் மட்டையால் மனைவியை தலையில் அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

சேலம் சூரமங்கலம் ரெட்டிப்பட்டியைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவர், ஊர்க்காவல் படையில் பணியாற்றுகிறார். இவருடைய மகன் கீர்த்திராஜ் (வயது 31). தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கீர்த்திராஜின் மனைவி தனஸ்ரீயா (வயது 26). பி.இ., பட்டதாரி. இவர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. குழந்தைகள் இல்லை. இது தொடர்பாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. 

 

கடந்த பத்து நாள்களுக்கு முன்பு அவர்களுக்குள் குழந்தை இல்லாதது தொடர்பாக மீண்டும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. அப்போது மனைவியை கீர்த்திராஜ் தாக்கியுள்ளார். இதனால் கோபித்துக்கொண்ட தனஸ்ரீயா, சூரமங்கலத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்குச் சென்று விட்டார். 

 

இந்தநிலையில் ஜூன் 11- ஆம் தேதி மாமனார் வீட்டுக்குச் சென்ற கீர்த்திராஜ், மனைவியை சமாதானம் செய்து, தனது வீட்டுக்கு அழைத்து வந்தார். அன்று இரவு, கீர்த்திராஜும், அவருடைய தந்தையும், தனஸ்ரீயா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவருடைய பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளனர். 

 

இதைக்கேட்டு தனஸ்ரீயாவின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். தனது மகளை, கீர்த்திராஜ் அடித்துக் கொலை செய்துவிட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகம் ஆடுவதாக அவர்கள் சூரமங்கலம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். 

 

அதன்பேரில் காவல்துறையினர் நிகழ்விடம் சென்று சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். சம்பவம் நடந்த அறையின் சுவரில் ரத்தத் துளிகள் தெறித்து இருந்தன. தனஸ்ரீயாவின் பின்பக்க தலையில் காயமும் இருந்தது. 

 

திருமணம் ஆகி மூன்று ஆண்டுகளுக்குள் சந்தேகத்திற்குரிய வகையில் மரணம் நிகழ்ந்திருப்பதால், இதுகுறித்து சேலம் கோட்டாட்சியர் விஷ்ணுவர்த்தினி நேரில் சென்று விசாரணை நடத்தினார். கீர்த்திராஜ், அவருடைய தந்தை பெரியசாமி ஆகியோரை சூரமங்கலம்  காவல்நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரித்தனர். அதில் பரபரப்பு தகவல்கள் கிடைத்தன. 

 

இது தொடர்பாக காவல்துறை தரப்பில் கேட்டபோது, ''தன்னிடம் கோபித்துக் கொண்டு பெற்றோர் வீட்டுக்குச் சென்றுவிட்ட தனஸ்ரீயாவை, ஜூன் 11- ஆம் தேதி சமாதானப்படுத்தி மீண்டும் ரெட்டிப்பட்டியில் உள்ள தனது வீட்டுக்கு அழைத்து வந்திருக்கிறார் கீர்தத்திராஜ். 

 

குழந்தை பிறக்காதது தொடர்பாக அன்று இரவு சாதாரணமாகத்தான் பேசிக்கொண்டு இருந்தனர். ஒருகட்டத்தில் அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருவரையொருவர் தரக்குறைவாக திட்டிக் கொண்டுள்ளனர். ஒருகட்டத்தில், ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற கீர்த்திராஜ், மனைவியை சமாதானப்படுத்த முடியாத இயலாமையால் வீட்டில் கிடந்த கிரிக்கெட் மட்டையால் அவருடைய தலையில் தாக்கியுள்ளார். இதில் தனஸ்ரீயாவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அப்போதே உயிரிழந்து விட்டார். 

 

கணவன், மனைவி இடையே அடிக்கடி சண்டை நடப்பது அக்கம்பக்கத்தினருக்கும் தெரியும் என்பதால், அதையே சாக்காக வைத்து விரக்தியில் தற்கொலை செய்து கொண்டதாக சித்தரிக்க முயன்றுள்ளனர். அதையடுத்து, மனைவியின் சடலத்தை தூக்கில் தொங்கவிட்டு தற்கொலை நாடகத்தை அரங்கேற்றியுள்ளார் கீர்த்திராஜ். 

 

துப்பட்டாவால் தூக்கு மாட்டிக் கொண்டதுபோல் சித்தரித்துள்ளார். பின்னர் அவரே சடலத்தை தூக்கில் இருந்து கீழே இறக்கிப் போட்டதுபோல் பலரையும் நம்ப வைத்துள்ளார்,'' என்கிறார்கள் காவல்துறையினர்.

 

இதையடுத்து கீர்த்திராஜை காவல்துறையினர் கைது செய்தனர். அவரை,  நீதிமன்ற உத்தரவின்பேரில் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இது ஒருபுறம் இருக்க, கீர்த்திராஜ் தன் மனைவியிடம் பெற்றோர் வீட்டில் இருந்து சொகுசு கார் வாங்கி வரும்படியும் கொடுமைப் படுத்தியதாகவும் கூறப்படுகிறது. 

 

இது தொடர்பாக, சேலம் கோட்டாட்சியர் விசாரணை நடந்து வருகிறது. வரதட்சணைக் கேட்டு சித்ரவதை செய்து இருந்தது தெரிய வந்தால் கீர்த்திராஜ் மீது மேலும் ஒரு வழக்கு பாயும் என்கிறார்கள். 


 

சார்ந்த செய்திகள்