நாகை அருகே நுண்கடன் நிதி நிறுவனங்களில் 500க்கும் மேற்பட்டவர்களின் பெயரில் கோடிக்கணக்கில் பணம் வாங்கிக் கொண்டு கணவன், மனைவி தலைமறைவான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாகை மாவட்டம், வேளாங்கண்ணி அடுத்த ஒரத்தூர் ஊராட்சி, பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் காந்தி. இவரது மனைவி வித்யா. வித்யா அருகில் உள்ள நரியங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வந்துள்ளார். காந்தி பொரவாச்சேரியில் மரப்பட்டறை வைத்து நடத்தி வந்துள்ளார். வித்யா கடந்த 5 ஆண்டுகளாக அப்பகுதியில் உள்ள பெண்களிடம், எங்களுக்கு உடல்நிலை சரியில்லை மருத்துவ செலவு செய்ய வேண்டும் என்றும் புது பட்டறை துவங்கப்போகிறோம் என்றும் பல்வேறு காரணங்களைக் கூறி உங்கள் பெயரில் நுண்கடன் நிறுவனங்களில் கடன் வாங்கிக் கொடுங்கள். அந்த கடனை நான் கட்டி விடுகிறேன் என்று சொல்லிக் கேட்டுள்ளார்.
அவர்களின் உடல்நிலையைக் கண்டு இரக்கப்பட்ட அப்பகுதி பெண்கள் கடன் பெற்றுக் கொடுத்துள்ளனர். இதேபோல் ஒருத்தருக்கு ஒருத்தர் தெரியாமல் ஒரத்தூர், அகர ஒரத்தூர், வேர்க்குடி, பாப்பாகோவில், நிர்த்தனமங்கலம், நரியங்குடி உள்ளிட்ட சுற்றுவட்டாரக் கிராமங்களில் 500க்கும் மேற்பட்டவர்களின் பெயரில் அரேஸ், பிங்கர், ஈஷாப், லெஷ்மி கடாட்ஷம், கிராமின் கோட்டா, உதயம், ஜோதி, எக்விடாஸ், பெல் ஸ்டார், சமஸ்தானம், பியூஷன், கிராம விடியல் உள்ளிட்ட பல்வேறு நுண்கடன் நிறுவனங்களில் பல கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளனர்.
வித்யா அரசுப் பள்ளியில் சத்துணவுப் பணியாளராக இருந்ததால் அவர்களும் நம்பி தங்களது பெயரில் 5, 6 நிறுவனங்களில் கடன் வாங்கிக் கொடுத்துள்ளனர். மேலும் அப்பகுதி பெண்களிடம் இருந்து ரேசன் கார்டு, வங்கிக் கணக்கு புத்தகம், ஆதார் அட்டை, ஏடிஎம் கார்டு அனைத்தையும் வாங்கி வைத்துக் கொண்டு குழுத் தலைவியாகவும் செயல்பட்டு அவர்களுக்கு தெரியாமலேயே துணைக் கடன் வாங்கியும் மோசடி செய்துள்ளனர்.
இந்த நிலையில் காந்தியும் அவரது மனைவி வித்யாவும் கடந்த வாரம் ஊருக்கு சென்றவர்கள் திரும்ப ஊருக்கு வரவில்லை. அப்போது அந்த வாரத்தில் நுண்கடன் நிறுவனங்களுக்கு பணம் கட்டாததால் அதன் ஊழியர்கள் பணம் வாங்கிக் கொடுத்தவர்களின் வீடுகளுக்கு வந்து பணம் கட்டச் சொல்லியுள்ளனர். அப்போது அந்த பெண்கள் வித்யாவின் செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது செல் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது.
இதனால் ஒவ்வொரு பெண்களும் வித்யா வீட்டிற்கு வர, அவர்கள் கார் மற்றும் 3 இருசக்கர வாகனங்களுடன் தலைமறைவாகியிருப்பது தெரியவந்தது. மேலும் ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் 500க்கும் மேற்பட்டவர்களிடம் பல கோடி ரூபாய் ஏமாற்றி ஓட்டம் பிடித்ததும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து காந்தி, வித்யா வீட்டின் முன்பு திரண்ட கிராம மக்கள் மண்ணை வாரி இறைத்தும் சாபம் விட்டும் அழுது புலம்பியதோடு நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து மோசடி செய்த கணவன், மனைவி மீது புகார் அளித்தனர்.