மனைவியால் ஏற்பட்ட அவமானம் தாங்க முடியாமல் அவருடைய கணவன் மற்றும் குழந்தைகள் கியாஸ் சிலிண்டர் வெடிக்க செய்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் உசிலம்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. மதுரை உசிலம்பட்டி அருகில் உள்ள தொட்டப்பநாயக்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா (வயது 35). இவர் அப்பகுதியில் டீக்கடை நடத்தி வந்துள்ளார். இவருடைய மனைவி கீதா(31). இந்த தம்பதிக்கு பிரதீபா (8), ஹேமலதா (5) என்ற 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் கருப்பையா மனைவி கீதாவிற்கும் அதே பகுதியை சேர்ந்த ஆனந்தகுமார் என்ற வாலிபருக்கு தொடர்பு இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்த விஷயத்தை அறிந்த கருப்பையா மனைவியையும், அந்த வாலிபரையும் கண்டித்துள்ளார். இந்த சம்பவத்திற்கு பிறகு கணவன், மனைவிகளுக்கு இடையே குடும்பத்தில் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் கருப்பையாவின் மனைவி கீதா கோபித்து கொண்டு அவரின் தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
இதனையடுத்து தனது இரண்டு மகள்களுடன் கருப்பையா அதே ஊரில் வாழ்ந்து வந்துள்ளார். மனைவி வேறு ஒரு வாலிபருடன் பழகிய அவமானம் தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொள்ள கருப்பையா முடிவு எடுத்ததாக சொல்லப்படுகிறது. அதன் பின்பு தான் இறந்துவிட்டால் மகள்கள் அனாதையாக இருந்து விடுவார்கள் என்று எண்ணிய கருப்பையா அவர்களையும் கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற முடிவை எடுத்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் தனது இரண்டு மகள்களையும் பள்ளிக்கு அனுப்பாமல், தான் நடத்தி வரும் டீ கடைக்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர் அங்கு இருந்த கியாஸ் சிலிண்டரை திறந்து வெடிக்கச் செய்து கருப்பையா மற்றும் அவருடைய 2 மகள்களும் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டனர். இந்த சம்பவத்தால் அந்த இடமே போர்க்களம் போன்று காட்சி அளித்தது. சம்பவ இடத்தில் கருப்பையாவும், அவருடைய மூத்த மகள் பிரதீபாவும் தீயில் கருகி பிணமாக கிடந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பின்பு தகவல் அறிந்து வந்த போலீஸார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக கருப்பையாவின் மனைவி கீதா, கீதாவுடன் தொடர்பில் இருந்த ஆனந்தகுமார், இவருடைய தந்தை கருப்பையா, தாய் சொர்ணம், சகோதரி அபிராமி, கீதாவின் தந்தை பெரியகருப்பன், சித்தப்பா மலைச்சாமி ஆகிய 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில் கீதா, பெரியகருப்பன், மலைச்சாமி ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் கருப்பையா மனைவியுடன் தொடர்பு வைத்திருந்த ஆனந்தகுமார் மற்றும் அவருடைய குடும்பத்தினரை இதுவரை கைது செய்யவில்லை எனக்கூறி, கருப்பையா உள்பட 3 பேர் உடல்களை வாங்க மறுத்து அவருடைய உறவினர்கள் நேற்று மதுரை-தேனி சாலையில் தொட்டப்பநாயக்கனுார் விலக்கில் திடீரென்று மறியலில் ஈடுபட்டனர். பின்பு மறியலில் ஈடுபட்ட கருப்பையாவின் உறவினர்களிடம் போலீஸார் சமாதானம் செய்து, கண்டிப்பாக ஆனந்தகுமார் மற்றும் அவரது குடும்பத்தினரை கைது செய்கிறோம் என்று உறுதியளித்ததை தொடர்ந்து மறியல் செய்வதை கைவிட்டனர். இந்த சம்பவத்தால் மதுரை-உசிலம்பட்டி, தேனி சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.