விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தைச் சேர்ந்தவர் 58 வயது ஜானிபாஷா. இவர் 2004ல் திண்டிவனம் செஞ்சி சாலையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகள் விற்பனை செய்த பிள்ளைப் பிறை பொருட்களை வாங்குவதற்காக இரண்டு லட்சத்தி ஐந்தாயிரம் ரூபாய் எடுத்துச் சென்றுள்ளார்.
அப்போது திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகில் உள்ள புதுப்பாளையம் அருகிலுள்ள வீரமாத்தி தோட்டத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் செந்தில் என்கிற சின்னச்சாமி திண்டிவனம் மேம்பாலம் அருகே வழிமறித்து அவரிடம் இருந்த பணத்தைப் பறித்துச் சென்றுள்ளார்.
இதுகுறித்து ஜானி பாஷா திண்டிவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் பேரில் செந்திலை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். நீதிமன்றத்தில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த செந்தில் வழிப்பறி கொள்ளை வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வந்துள்ளார்.
இதையடுத்து நீதிமன்றம் இவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது. ஆனால் இவர் போலீசில் சிக்காமல் 17 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்துள்ளார். இதேபோன்ற பல குற்ற வழக்குகளில் தொடர்புடைய செந்தில் நீதிமன்றத்தில் சம்பந்தப்பட்ட வழக்குகளில் ஆஜராகாமல் ஏமாற்றி வந்துள்ளார்.
இதையடுத்து சம்பந்தப்பட்ட வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் ஏமாற்றி வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவின்பேரில் டிஎஸ்பி கணேசன் தலைமையிலான தனிப்படை போலீசார் திருப்பூர் மாவட்டத்தில் இருந்த செந்திலை சுற்றிவளைத்து கைது செய்தனர். இவர் மீது தமிழகம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.