தொலை தொடர்பு துறையில் தனியார் மயத்தை புகுத்தி கார்பரேட் நிறுவனங்களின் கொள்ளை லாபத்திற்கு வாசல் திறந்துள்ள மத்திய பா.ஜ.க.மோடி அரசு பொதுத் துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்.லின் குரல்வளையை கடுமையாக நெரித்துக் கொன்டிருக்கிறது.
இதில் பணிபுரிகிற அலுவலர்கள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரைக்கும் அவர்களுக்கு பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து அவர்களாகவே வேலையை விட்டு ஓடிவிட வேண்டும் என திட்டம் தீட்டி செயல்படுத்தி வருகிறது என மத்திய பா.ஜ.க. அரசு மீது கடுமையாக குற்றம் சாட்டுகிறார்கள் பி.எஸ்.என்.எல். பணியாளர்கள்.
ஈரோடு, காந்திஜி ரோட்டில் பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் அதன் ஊழியர்கள் திங்கள்கிழமை ஒரு நாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் கந்தசாமி தலைமை தாங்கினார். மாநில செயலாளர் பாபுராதா கிருஷ்ணன் கலந்து கொண்டார்.
அவர்கள் கூறும்போது, "விருப்ப ஓய்வு 2019 திட்டத்தில் பென்ஷன் பெறுவதில் உள்ள தடைகளை நீக்க வேண்டும், பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை குறைக்க கூடாது, பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு 4 ஜி சேவையை உடனடியாக வழங்க வேண்டும், 3 -வது ஊதிய மாற்றத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் மற்றும் உரிய தேதியில் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும்" என்றனர். மேலும் 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரத போராட்டம் நடந்தது.