கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தொடர் நடவடிக்கை எடுத்துவருகின்றன. இந்தக் காலகட்டத்தில் உழைப்பால் பசியாறும் மனித சமூகத்தினுடைய வாழ்வியல் போராட்டம் தொடர்ந்து பல்வேறு பிரச்சனைகளை அவர்களுக்குள் ஏற்படுத்தி வருகிறது. நடுத்தர வர்க்கம் முதல் சாதாரண கூலித் தொழிலாளிகள் வரை இன்றைய சூழ்நிலையில், அவர்களை மிகவும் பாதித்துவருகிறது. இந்த நிலையில்தான் திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஒரு இளைஞர் தனது பெற்றோர்களைக் காப்பாற்றுவதற்காக குறிப்பாக, அவரது தந்தை ஒரு பெட்டிக்கடை வைத்துள்ளார். அதுவும் அந்த வயதானவர் ஒரு மாற்றுத்திறனாளி. அந்தக் குடும்பத்தின் கஷ்டத்தை உணர்ந்து அந்த இளைஞர் ஈடுபட்ட செயல் என்பது சட்ட விரோதம். அவருக்கு அது தெரியவில்லை. அவர் செய்தது முழுக்க முழுக்க சட்ட மீறல்தான். ஆனால், திருப்பத்தூர் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர், இளம் எஸ்.பி. சிபிசக்கரவர்த்தி இச்சம்பவம் குறித்து கேள்விப்பட்டு, சம்பந்தப்பட்ட அந்த இளைஞரை நேரில் வரவழைத்து அவரின் பிரச்சனைகளைக் கவனமுடன் கேட்டுள்ளார். அந்த இளைஞனின் குடும்பச் சூழல் எஸ்.பி.யை மிகவும் வருத்தமடைய செய்தது.
அந்த இளைஞர், தனது தந்தை பார்வையற்ற மாற்றுத்திறனாளி என்பதோடு அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாகவும், இந்தக் காலகட்டத்தில் தனக்கு நிதியுதவி எதுவும் கிடைக்காத பட்சத்தில் தவறான இந்தச் சட்டவிரோத வேலையில் தெரியாமல் ஈடுபட்டதாகவும் அந்தக் கல்லூரி மாணவர் தெரிவித்துள்ளார். இதை முழுமையாக விசாரித்த மாவட்ட எஸ்.பி. சிபி சக்கரவர்த்தி, அந்த இளைஞனரிடம் மனிதாபிமனத்துடன் என்ன தேவை என கேட்டுள்ளார். அந்த மாணவனுக்குத் தேவையான கல்லூரி கட்டணத்தை முழுமையாக தனது சம்பளத்திலிருந்து செலுத்துவதாக கூறியதோடு, உடனடியாக அந்த தொகைக்கு தனது வங்கிக் கணக்கில் செக் போட்டு கொடுத்துள்ளார்.
அவரது தந்தைக்குத் தேவையான மருத்துவ சிகிச்சைக்கும் அவர் உதவுவதாகவும் கூறி இனிமேல் இதுபோன்ற சட்ட விரோத செயலில் எக்காரணத்தைக் கொண்டும் ஈடுபடக்கூடாது என அறிவுறுத்தியுள்ளார். மேலும், அந்த சாதாரண குடும்பத்திலிருந்து வந்த மாணவனிடம், “சமூகத்தில் உன்னைப் போன்ற இளைஞர்கள் நல்ல செயல்களில் ஈடுபட வேண்டும், மக்கள் மத்தியில் நல்ல பெயர் எடுக்க வேண்டும், கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் உன்னைப் போன்றவர்கள் முன்னேறி வர வேண்டும்” என நம்பிக்கை வார்த்தை கூறி மருத்துவ செலவுக்குத் தேவையான பணத்தையும் கொடுத்து அனுப்பிவைத்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி. சிபிசக்கரவர்த்தியின் இந்த மனிதாபிமான செயல், ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் எனவும், இதுபோல் காவல்துறையில் நடப்பது மிகவும் அரிதானது என்றும் சக காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளார்கள். மாவட்ட எஸ்.பி. சிபி சக்கரவர்த்தியின் இந்தச் செயல் பாராட்டுக்குரியது என திருப்பத்தூர் மாவட்ட சமூகநல அமைப்பைச் சேர்ந்தவர்கள் பாராட்டுகளைத் தெரிவித்துவருகிறார்கள்.