திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டது. திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் நகராட்சி சார்பில் கட்டண கழிப்பிடம் உள்ளது. அதனை தனி நபர் ஒருவர் ஏலம் எடுத்த நிலையில் கழிப்பிடத்தில் இருந்து வெளியேறும் மனிதக் கழிவுகள் நேரடியாக மூடப்படாத கால்வாயில் கலந்து செல்கிறது.
இதுப்பற்றி நகராட்சி ஆணையர், சேர்மன் என ஆகியோரிடம் பலமுறை புகார் தந்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் பேருந்து நிலைய பகுதி துர்நாற்றம் வீசும் பகுதியாக மாறியது. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் பேருந்து நிலையம் இப்படி இருப்பது குறித்து அதிகாரிகள், சேர்மன், கவுன்சிலர்கள் என யாரும் கண்டுகொள்ளவில்லை.
சமூக ஆர்வலர்களின் வலியுறுத்தலுக்கு பிறகு அதிகாரிகள், ஒப்பந்ததாரரை அழைத்து அதை கிளீன் செய்யுங்கள் என சாப்டாக சொன்னதன் அடிப்படையில், ஒப்பந்தம் எடுத்த நபர் 2 பேரை கால்வாயில் இறங்கி கால்வாயில் இருந்ததை அள்ளி வெட்டவெளியில் அள்ளி போட்டுள்ளனர். இதனால் அந்த வழியாக செல்லும் பேருந்துகள், பாதசாரிகள், வாகன ஓட்டிகளுக்கு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கழிப்பறையில் இருந்து செப்டிக் டேங்க் கட்டி கழிவுகளை அதில் விடாமல் நேரடியாக கால்வாயில் விட்டு இருப்பதும், அதனை அள்ள இயந்திரங்கள் இருந்தும் அதனை பயன்படுத்தாமல் மனித கழிவுகளை அகற்ற மனிதனைப் பயன்படுத்தியது சட்டப்படி தவறு. அதிகாரிகளும் இதனை கண்டுக்கொள்ளவில்லை.
இதுபற்றி நம்மிடம் பேசிய சமூக ஆர்வலர்கள் சிலர், கழிவறையில் கூட கமிஷன் வாங்குகிறார்கள் அதிகாரிகள், அரசியல்வாதிகள், இதில் சில செய்தியாளர்களும் அடக்கம். இதனால் சிறுநீர் கழிக்க 5 ரூபாய், டூ பாத்ரூம் செல்ல 10 ரூபாய் என நிர்ணயித்த விலையை விட அதிகமாக வாங்குகிறார்கள். கழிப்பறை உள்ளேயும் சுகாதாரம் இல்லை, வெளியேவும் சுகாதாரமாக இல்லை. நகராட்சி சேர்மன் அறை, கமிஷனர் அறையில் உள்ள பாத்ரூம் அவ்வளவு சுத்தமாக வைத்துள்ளார்கள். வரிகட்டும் பொதுமக்கள் பயன்படுத்தும் கழிவறை சுகாதாரமற்று இருக்கிறது, அது நோய் பரப்புகிறது என்கிறார்கள்.