அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று ஆர்.எஸ்.எஸ் சார்பில் பேரணி நடத்த அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. இதற்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பின. மேலும் விடுதலை சிறுத்தைகள் மற்றும் அதன் தோழமை கட்சிகள் சமூக நல்லிணக்க மனித சங்கிலி பேரணி நடத்த அனுமதி கோரின. இதனை தொடர்ந்து இரு அமைப்புகளும் பேரணி நடத்த காவல் துறை தடைவிதித்தது. இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு மீண்டும் நீதிமன்றத்தை நாடியது. இதன் பின் நவம்பர் 6 ம் தேதி ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த அனுமதி வழங்கப்பட்டு இருந்தது.
மதநல்லிணக்க மனித சங்கிலிக்கு அனுமதி வேண்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் சார்பில் காவல் துறை தலைமை இயக்குநரை சந்தித்து வலியுறுத்தி இருந்தனர்.
இதன் பின் அக்.11 ஆம் தேதி மாலை 4 மணிக்கு சமூக நல்லிணக்க மனித சங்கிலி நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியது. கீ.வீரமணி, கே.எஸ்.அழகிரி, கே.பாலகிருஷ்ணன், முத்தரசன், திருமாவளவன், ஜவாஹிருல்லா, வேல்முருகன் ஆகியோர் இணைந்து கூட்டாக அறிவிப்பினை வெளியிட்டனர்.
இந்நிலையில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அக்டோபர் 11ம் தேதி தமிழகம் முழுவதிலும் 500க்கும் மேற்பட்ட இடங்களில் வாய்ப்புள்ள இடங்களில் ஒன்றினைந்து தோழமைக் கட்சிகளின் உதவியுடன் சமூக நல்லிணக்க மனிதச்சங்கிலி அறப்போர் நடைபெறுகிறது. ஆளும் கட்சி என்கிற முறையில் திமுக இதில் பங்கேற்கவில்லை. திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள அனைத்து கட்சிகளும் மனிதச்சங்கிலி அறப்போரில் பங்கேற்க முன் வந்துள்ளன.
இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் ஆர்.எஸ்.எஸ் ஒரு பாசிச அமைப்பு என்பதை உணர்த்தக்கூடிய வகையில் மதத்தின் பெயரால் சாதியின் பெயெரால் மக்களை பிளவுபடுத்தும் போக்கை ஏற்கமாட்டோம் என்பதை உணர்த்தும் வகையில் மனிதச்சங்கிலி அறப்போர் நடைபெறும். இந்த அறப்போரில் நாம் காட்டும் அமைதி நாம் கடைபிடிக்கும் கட்டுப்பாடும் நம் கொள்கை பகைவர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்.
கோவையில் மாநகராட்சிப் பள்ளியில் ஆர்.எஸ்.எஸ் பேரணி பயிற்சி வகுப்பு நடத்தியது. அதை பள்ளி நிர்வாகம் மறுத்துள்ளது. காவல்துறையினர் அதை உடனடியாக கண்டறிய வேண்டும். இப்படிப்பட்ட பயிற்சிகளை தமிழகத்தில் அளிப்பதற்கு இடம் கொடுக்க கூடாது. தமிழகத்தில் மதத்தின் பெயரால் மக்கள் மோதிக்கொள்ளும் நிலை பெரிதாக நிகழ்ந்தது இல்லை. எனவே, வன்முறையை தூண்ட ஆர்.எஸ்.எஸ் பயிற்சி அளிப்பதை எந்த நிலையிலும் அனுமதிக்கக் கூடாது” எனக் கூறியுள்ளார்.