
சேலத்தை சேர்ந்த பாஜக முன்னாள் எம்எல்ஏ கே.என்.லட்சுமணன், உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளார். அவரை நலம் விசாரிப்பதற்காக சேலம் வந்திருந்த அக்கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது:
கரோனாவால் இந்தியாவில் 50 கோடி பேர் வரை பாதிக்கப்படலாம் என உலக நாடுகள் கணித்திருந்தன. இந்திய அரசு, சரியான நேரத்தில், சரியான நடவடிக்கை எடுத்ததால் கரோனா பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 15 சதவீதம் பேர் இறந்துள்ளனர். இந்தியாவில் கரோனாவால் ஏற்படும் மரணங்கள் 2.6 சதவீதமாக உள்ளது.
ஊரடங்கினால் பாதிக்கப்பட்டோருக்கு மத்திய அரசு 20 லட்சம் கோடி ரூபாய்க்கு நிவாரண உதவிகளை அறிவித்திருக்கிறது. இதன்மூலம் சிறு, குறு, நடுத்தர தொழில்துறை இழப்பில் இருந்து மீண்டு வரும். வேலையிழப்பு கட்டுப்படுத்தப்பட்டு, ஓராண்டுக்குள் தொழில்துறை மிகப்பெரிய வளர்ச்சியைக் காணும்.
இந்தியாவில் தற்போது தினமும் 2 லட்சம் பிபிஇ உடைகளும், 2 லட்சம் என்95 முகக்கவசங்களும் தயாரிக்கப்பட்டு வருகிறது. இன்னும் ஒரு மாதத்திற்குள் பிசிஆர் மற்றும் துரித பரிசோதனை கருவிகளையும் நாமே தயாரிக்கும் வகையில், இந்திய மருத்துவத்துறை தற்சார்பு கொள்கையை நோக்கி வேகமாக சென்று கொண்டிருக்கிறது.
தமிழகத்தில் இருந்து இதுவரை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 2 லட்சம் பேர் ரயில்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் வரை வெளிமாநில தொழிலாளர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். நடந்து செல்வதை தவிர்க்க வேண்டும்.
பிரதமர் மோடி இரண்டாம் முறையாக ஆட்சிப்பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்றதையொட்டி, அரசின் சாதனைகள் கடிதங்கள் மூலமாக 10 கோடி வீடுகளுக்குக் கொண்டு சேர்க்க உள்ளோம்.

சீன எல்லையில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலை குறித்து திருமாவளவன், தன் இணையதள பக்கத்தில் இந்திய&சீன எல்லையில் கோபேக் மோடி என பதிவிட்டுள்ளார். ஒரு போலியான படத்தை வைத்து அரசியல் செய்யும் திருமாவளவன் ஒரு தீய சக்தி. அவர் பொறுப்போடு நடந்து கொள்ளவில்லை. அவரை கைது செய்ய வேண்டும் என்று அரசை வலியுறுத்துவோம்.
திமுகவில் உள்ள அனைத்து தலைவர்களும், அனைத்து சமூகத்தினரையும் இழிவுபடுத்தி பேசி வருகின்றனர். நல்ல மனநிலையில் உள்ள தலைவர்கள் யாருமே அங்கு இல்லை. புதிதாக பாஜக தலைவராக பொறுப்பேற்ற முருகனுக்கு வாழ்த்து சொல்லும் அரசியல் நாகரீகம்கூட திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தெரியவில்லை. இவ்வாறு ஹெச்.ராஜா கூறினார்.