பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு இரண்டு வாரங்களுக்கு முன்பு குறைத்தது. அதன்படி, பெட்ரோல் விலை 9 ரூபாய் 50 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாயும் குறைக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து, மாநில அரசும் பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைக்க வேண்டுமென தமிழக பாஜக சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. பெட்ரோல், டீசல் மீதான வரியை மாநில அரசு குறைக்காவிட்டால் தமிழக பாஜக சார்பில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடுவோம் அக்கட்சித் தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தமிழக பாஜக மூத்த தலைவர்கள் அண்ணாமலை தலைமையில் கோட்டை நோக்கி முற்றுகை பேரணி இன்று நடைபெற்றது. ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து கோட்டையை நோக்கிப் புறப்பட்ட பாஜக தொண்டர்கள், பாரத் மாதாகி ஜெய் கோஷம் எழுப்பியபடி சென்றனர். அவர்களை அனைவரையும் பாதியில் தடுத்து நிறுத்திய காவல்துறையினர் அனைவரையும் கைது செய்தனர். இந்நிலையில் இந்த போராட்டத்தில் பேசிய பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தமிழக அரசைக் கடுமையாகச் சாடினார். அவர் இதுதொடர்பாக பேசும்போது, " இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வந்திருக்கும் மக்கள் அனைவரும் கூட்டப்பட்ட கூட்டம் அல்ல, தானாக வந்திருக்கும் மக்கள் வெள்ளம். மக்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த அவர்களாகவே விரும்பி இங்கே வந்துள்ளார்கள். இந்த திராவிட மாடல் ஆட்சியில் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். தமிழக நிதியமைச்சர் முதலில் பதவி விலக வேண்டும் . அவர் தமிழரே அல்ல, அவருக்கு தமிழ் பேசவே வரவில்லை. இந்த நிலையில் என்னை பிகாரி என்று கூறுகிறார்கள்" என்றார்.