இந்திய அளவில் பாஜகவுக்கு தோள் கொடுத்து கூட்டணியாக இணையும் முக்கிய கட்சியாக அதிமுக உள்ளது. மற்ற மாநிலங்களில் பாஜகவை அணிசேர்த்து கூட்டணியாக தேர்தலை எதிர்கொள்ள மாநிலக் கட்சிகள் பலதும் தயக்கம் காட்டி வரும் நிலையில் இங்கு தமிழ்நாட்டில் உள்ள அரசியல் நிலைமைகளை பாஜக சாதகமாக பயன்படுத்தி வருகிறது. அதற்காக தமிழ்நாட்டை ஆளும் அதிமுக அரசும் பாஜகவுக்கு மிகவும் இணக்கமாகவும் அக்கட்சியின் உத்தரவுகளை ஏற்றுக்கொள்ளும் நிலையிலும் இருக்கிறது.
இந்த நிலையில்தான் கொள்கை ரீதியாக பாஜக தமிழ்நாட்டில் சில கட்டமைப்புகளை உருவாக்க திட்டமிட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளின் தாக்கம், இப்போதும் திராவிட இயக்கக் கொள்கைகளை கட்சிகள் தாங்கிப் பிடிப்பதற்கு மூல காரணமாக இருப்பது பெரியார்தான்.
திராவிட இயக்க கட்சிகள், அமைப்புகள், தமிழ் இயக்கங்கள் அவ்வப்போது இது பெரியார் மண்... இது பெரியார் மண்.. என்று முழக்கம் விடுவது வழக்கம். ஆகவே பெரியார் மண் என்கின்ற கோஷத்தை முறியடிப்பது என்ற கட்டமைப்பில் தான் பாஜகவின் திட்டம் உள்ளது. குறிப்பாக பெரியார் பிறந்த ஈரோட்டில் இம்முறை பாஜக தான் போட்டியிட வேண்டும் என்று அக்கட்சியின் தலைமை முடிவு செய்துள்ளது.
அதன்படி தமிழ்நாட்டில் மேற்கு மண்டலமான கொங்கு மண்டலத்தில் கோயமுத்தூர், திருப்பூர், ஈரோடு ஆகிய மூன்று பாராளுமன்ற தொகுதிகளிலும் போட்டியிடுவது என முடிவு செய்துள்ளது. இதில் கோவையில் அக்கட்சியின் முன்னாள் எம்பியான சி.பி. ராதாகிருஷ்ணன், திருப்பூரில் அக்கட்சியின் மாநில செயலாளர்களில் ஒருவரான வானதி சீனிவாசன், ஈரோட்டில் அக்கட்சியின் தேசிய செயலாளர் எச். ராசாவை நிறுத்துவது என அவர்களின் திட்டம் உள்ளது என்று அதிமுகவின் சீனியர்களே சொல்கிறார்கள்.
இந்த மூன்று பேரையும் வெற்றிபெற வைக்க வேண்டியது அதிமுகவுக்கு பாஜக மேலிடம் கொடுத்த உத்தரவாம். இந்த பின்னனியில் தான் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கோவைக்கு வந்தார். பிரதமர் மோடி திருப்பூரில் பிரச்சாரம் செய்ய உள்ளார். அடுத்து 14ஆம் தேதி பாஜக தேசிய செயலாளர் அமித்ஷா ஈரோடு அருகே உள்ள சித்தோட்டில் பிரச்சாரம் செய்ய வருகிறார். பா.ஜ.க.வின் இத்திட்டம் நடக்குமா இதற்கு அதிமுக ஒத்துப் போகுமா என்பதெல்லாம் அரசியல் வட்டாரத்தில் தொடர்ந்து அதிர்ச்சியோடு கவனிக்கப்படும் நிகழ்வுகளாக இருந்து வருகிறது.