தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை இந்தியத் தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வந்தது. இதனையடுத்து கடந்த 9 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் ஆணையர்கள் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு 5 மாநிலத் தேர்தலுக்கான தேதிகளைத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
அந்த அறிவிப்பின்படி, 5.25 கோடி வாக்காளர்களையும், 200 தொகுதிகளையும் கொண்ட ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரே கட்டமாக நவம்பர் 23 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. மேலும் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் மூன்றாம் தேதி நடைபெறுகிறது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து நவம்பர் 23 ஆம் தேதி நடைபெற இருந்த ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தேதி நவம்பர் 25 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. இதற்கான அறிவிப்பை இந்தியத் தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது. நவம்பர் 23 ஆம் தேதி அதிகத் திருமணங்கள் நடைபெறும் முகூர்த்த நாள் என்பதால் தேர்தல் தேதி மாற்றப்பட்டுள்ளது. அதே சமயம் வாக்கு எண்ணும் தேதியில் எந்த மாற்றமும் இல்லை என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத் தேர்தல் தேதி மாற்றம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் எம்.பி. தனது எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில், “தேவ் உதானி ஏகாதசிக்காக ராஜஸ்தான் தேர்தல் தேதியை மாற்றி அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம். தமிழர் திருநாளான பொங்கல் திருநாளன்று அறிவிக்கப்பட்ட ஸ்டேட் வங்கி தேர்வை மாற்றச்சொல்லி கடைசி வரை போராடினோம். ஆனால் மமதையோடு மாற்ற மறுத்தது மத்திய அரசு. தமிழகத்தின் மீதுதான் எத்தனை வகையான வஞ்சகம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.