தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் மாநிலம் முழுவதும் இன்று ஒரே கட்டமாக நடைபெற்றது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், பொதுமக்கள் வரிசையில் ஆர்வமுடன் காத்திருந்து வாக்களித்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே உள்ள மங்கலநாடு கிராமம் பகுதியில் வாக்குரிமைக் கொண்டவர் ஃபாருக்(50). இவர் வேலை நிமித்தமாக மலேசியா நாட்டில் வசித்துவருகிறார். இவர் சட்டமன்றம், நாடாளுமன்றம், உள்ளாட்சி ஆகிய அனைத்து தேர்தலிலும் தவறாமல் வாக்களிக்க மலேசியாவிலிருந்து தனது சொந்தக் கிராமத்திற்கு வருவார். இறுதியாக நடந்த 2021 சட்டமன்றத் தேர்தலிலும் தனது வாக்கைச் செலுத்த மலேசியாவிலிருந்து நான்கு நாட்களுக்கு முன்பு ஊருக்கு வந்து தனது வாக்கினைச் செலுத்தினார். இதுகுறித்து அவர் அப்போது, “இந்தியக் குடிமகனாக எனக்கான ஜனநாயக கடமையைச் செய்கிறேன்” என்று தெரிவித்தார்.
ஃபாருக் இப்படி ஒவ்வொரு தேர்தலுக்கும் வந்துபோவதைக் கண்டு அதே ஊரைச் சேர்ந்த அவரது நண்பர் ஷேக் இஸ்மாயில் என்பவரும் கடந்த சில தேர்தல்களுக்காக மலேசியாவிலிருந்து தனது சொந்த கிராமத்திற்கு வந்து தனது ஜனநாயக கடைமையை ஆற்றிவருகிறார். இவர்களின் செயல்பாடுகளைக் கண்டு அக்கிராமத்தில் 25-க்கும் மேற்பட்டோர் இது போன்று பல்வேறு நாடுகளிலிருந்து சொந்த ஊருக்கு வந்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றிவருகின்றனர். மலேசியாவிலிருந்து இவர்கள் ஒருமுறை வாக்களிக்க வரும்போது இவர்களுக்கு ஒரு மாதம் சம்பளம் கிடைக்காதாம். மேலும் வந்து செல்வதற்கும் ஏறத்தாழ ரூபாய் ஒரு இலட்சம் வரை செலவாகுமாம்.
இப்படியாக ஒவ்வொரு ஜனநாயக திருவிழாவும் ஒவ்வொரு சுவாரசியங்களையும், கடமை தவறா குடிமக்களையும் நமக்கு அடையாளப்படுத்தும். அந்தவகையில், இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திண்டுக்கல் மாவட்டம், 31வது வார்டில் ஒரு மூதாட்டி பக்கவாதம் வந்து படுக்கையிலிருந்து எழுந்துகொள்ளமுடியாத நிலையிலும், ஆம்புலேன்ஸ் உதவியுடன் வாக்குச் சாவடிக்கு வந்து ஸ்ட்ரெட்சர் மூலம் வாக்கு அளிக்கும் அறைக்குச் சென்று தனது வாக்கைப் பதிவு செய்தார். இதேபோல பேருந்தை பாதியில் நிறுத்தி வாக்களித்த ஓட்டுநர், மும்பையில் இருந்து வாக்களிப்பதற்காக தனது கிராமத்திற்கு வந்த பெண், கைக்குழந்தையோடு வாக்குச்சாவடி வந்த பெண் என இந்த தேர்தலில் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றுவதற்கு பல சாமானியர்கள் மறக்கவில்லை. மாலை 5 மணிக்கு மேல், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுள் பலரும்கூட கவச உடையுடன் வந்து தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.
இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பிற்பகல் மூன்று மணி நிலவரப்படி தருமபுரியில் அதிகப்பட்சமாக 66% வாக்குகள் பதிவாகியிருக்கிறது. சென்னையில் 30% அளவே வாக்குகள் பதிவாகியுள்ளன. தேர்தல் ஆணையம் ஒவ்வொரு தேர்தலை நடத்தும்போதும், 100% வாக்குப் பதிவை அடைய பல்வேறு நடவடிக்கைகளையும் விழிப்புணர்வுகளையும் மேற்கொண்டுவருகிறது. இருந்தாலும், அது இன்னும் எட்டப்படாத நிலையில் உள்ளது.
1996 தேர்தலில் நடிகர் ரஜினியின் வாய்ஸ் திமுகவை வெற்றி பெற வைத்ததாக ஒரு பேச்சு இன்றளவும் வந்துகொண்டிருக்கிறது. அதேபோல், தமிழ்நாட்டில் கண் தானம் குறைவாக இருந்தபோது, ரஜினியின் ஒரு மேடைப் பேச்சால் தமிழ்நாட்டில் ஏராளமானோர் கண் தானம் செய்தனர். சமயங்களில் தமிழ்நாடு இப்படி பிரபலங்களின் பேச்சுக்களாலும், செயல்களாலும் பெரும் மாற்றத்தை நோக்கி நகர்ந்திருக்கிறது.
இந்நிலையில், இன்று வாக்குப் பதிவு துவங்கியதிலிருந்து பொதுமக்கள் மட்டுமின்றி திரைத்துறையினரும் அரசியல் பிரமுகர்களும் வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். காலையிலேயே நடிகர்கள் விஜய், கார்த்தி, சூர்யா உள்ளிட்ட ஏராளமான திரைத்துறையினரும் வந்து தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர். ஆனால், திரைத்துறையின் உச்ச நட்சத்திரம் ரஜினி, நடிகர்கள் அஜித், சிம்பு, தனுஷ், விஷால், சிவகார்த்திகேயன், நடிகை திரிஷா உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்யவில்லை.
நட்சத்திரங்கள் மட்டுமல்ல நம்மைச் சுற்றியும் பலர் வாக்களிக்க தவறியதை நம்மால் காண முடியும். இதில், ”நமது ஒரு ஓட்டால் என்ன ஆகப்போகிறது..? யாருக்கு ஓட்டுப் போட்டு என்ன பயன்..?” என்ற எண்ணங்களால் வாக்களிக்காமல் இருப்பவர்களும் கணிசமானவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஃபாருக்கை பின்பற்றி இஸ்மாயில் உட்பட 25க்கும் மேற்பட்டவர்கள் தேர்தல்களில் வாக்களிக்க சொந்த ஊர்களுக்கு வரத்தொடங்கியுள்ளனர். ஃபாருக்கும், இஸ்மாயிலும் நட்சத்திரங்கள் இல்லை. ஆனாலும், அவர்களின் கடமை மற்றவர்களை மாற்றுகிறது. ஃபாருக்கும், இஸ்மாயிலும் 25 பேரை மாற்ற முடியுமெனில் நம்மால் சிலரையும், நமது சினிமா நட்சத்திரங்களால் பல ஆயிரம் மக்களையும் மாற்ற முடியும். நமது இந்தத் தேர்தலில் வாக்களிக்க நேரம் முடிந்துவிட்டது. அடுத்த 2024ல் நாட்டை யார் ஆள வேண்டும் எனத் தீர்மானிக்கக்கூடிய நாடாளுமன்றத் தேர்தல் வருகிறது. அதிலும் விடுமுறை கிடைத்ததே என்று இல்லாமல் நமது வாக்குகளைச் செலுத்தி ஜனநாயகத்தை காப்போம்.