திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பாச்சலூர் மலைக் கிராமத்தைச் சேர்ந்த 5ஆம் வகுப்பு சிறுமி கடந்த 15ஆம் தேதி பள்ளிக்குச் சென்றிருந்த நிலையில், மதிய வேளையில் காணாமல்போன சிறுமி பள்ளிக்கு அருகில் உள்ள புதரில் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அவர் சடலத்திற்கு அருகே மண்ணெண்ணெய் கேன், தீப்பெட்டி உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டன. சிறுமி கொலைக்கு நீதி வேண்டும் என பெற்றோர்கள் குழந்தையின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தரப்பில் உறுதியளித்ததைத் தொடர்ந்து உடலைப் பெற்றுக்கொண்ட பெற்றோர், உடலைத் தகனம் செய்துள்ளனர். உடலைப் புதைக்காமல் திண்டுக்கல் மின் மயானத்தில் தகனம் செய்ததே முதலில் சர்ச்சையை எழுப்பியது.
ஆனால் மூன்று நாட்கள் ஆகியும் இந்த சம்பவத்தின் மர்மம் விலகவில்லை. எங்கள் மகளின் இறப்புக்கு நீதி வேண்டும் என சிறுமியின் பெற்றோர்கள், உறவினர்கள் தொடர்ந்து கோரிக்கைவைத்துள்ளனர். இதுகுறித்து உள்ளூர்வாசிகள் தெரிவிக்கையில், ''பள்ளிக்கு 20 மீட்டர் தூரத்தில் உள்ள புதரில் சிறுமி இறந்து கிடக்கிறார். ஆனால் பள்ளி ஆசிரியர்கள் இதுகுறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது'' என கூறுகின்றனர். இது தொடர்பாக அச்சிறுமியுடன் படிக்கும் மாணவி ஒருவர் கூறுகையில், ''11 மணியில இருந்து அவளைக் காணும். தேடலாமும்னு போனப்ப சார் வந்தாங்க. அப்போது அவர்களிடம் சொன்னபோது, ‘அவங்க வீட்டுக்குப் போயிருக்கும். இல்லைனா எங்கனா போயிருக்கும். நீங்க பாடத்த மட்டும் கவனிங்க’னு சொல்லிட்டாங்க. அப்புறம் சாப்பாட்டுக்குப் போகும்போதுதான் தேடினோம்'' என்றார். இன்னொரு மாணவி, ''அவளைக் காணவில்லை என அந்தச் சிறுமியின் அக்கா வீட்டில் போய் பார்த்தபோது, வீட்டில் யாருமே இல்லை. பள்ளிக்கூடத்துக்கு வந்த அந்தச் சிறுமியின் அக்கா அழுதார். சரினு மேல போய் பார்த்தோம்.. ஒரு பாப்பா எரிந்துகிடந்ததைப் போல இருந்தது. சாரிடம் ஓடிப்போய் சொன்னோம். சார் எல்லாம் வந்து பார்த்தாங்க. அவங்க அம்மா அப்பாவும் வந்துட்டாங்க'' என்றார்.
கடந்த மூன்று நாட்களாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுவரும் நிலையில், இன்னமும் மர்மம் விலகவில்லை.