Skip to main content

வீட்டின் சுவர் இடிந்து 8 பேர் உயிரிழப்பு... வேலூரில் சோகம்!

Published on 19/11/2021 | Edited on 19/11/2021

 

house wall collapses in Vellore

 

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் அணைகள், ஏரிகள் நிரம்பிவழிகின்றன. வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடந்துவருவதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

 

மழை காரணமாக எதிர்பாராத விபத்து சம்பவங்களும் நடைபெறுகின்றன. நேற்று (18.11.2021) கடலூரில் மழை காரணமாகத் தொடக்கப்பள்ளி கட்டடம் இடிந்து தரைமட்டமானது. கடலூர் வானதிராயபுரம் பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளி கட்டடம் ஒன்று நேற்று காலை பெய்த கனமழை காரணமாக இடிந்தது. மழையால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்த நிலையில், உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை. இந்நிலையில், இன்று வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு, மசூதி தெருவில் ஒரு வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 4 பெண்கள், 4 குழந்தைகள் என மொத்தம் 8 பேர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் காயத்துடன் மீட்கப்பட்ட 5 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

லாரி ஏறியதால் பெண் தலைமை காவலர் பரிதாபமாக உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Female head constable passed away in lorry collision

வேலூர் மாவட்டம் அகரம் பகுதியை சேர்ந்த தட்சிணாமூர்த்தி மனைவி பரிமளா (42) இவர் ஆம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் ஏப்ரல் 17 ஆம் தேதி தேர்தல் பணிக்காக திருப்பத்தூர் மாவட்ட ஆயுதப்படையில் நடைபெற்ற கலந்தாய்வில் கலந்து கொண்டு மாலை வீட்டுக்கு புறப்பட்டார்.

திருப்பத்தூரில் இருந்து மாதனூர் வரை பேருந்தில் சென்றுள்ளார். மாதனூரில் இருந்து தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது, மாதனூர்- ஒடுகத்தூர் சாலையில் தாகூர் பள்ளி அருகில் ஆட்டோ ஒன்று குறுக்கே வந்ததால் சட்டென்று பிரேக் அடித்துள்ளார். அப்போது பின்னால் உட்கார்ந்து இருந்த பெண் தலைமை காவலர் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ஒடுகத்தூரில் இருந்து மாதனூர் நோக்கி வந்த லாரி தலைமை காவலர் பரிமளா மீது ஏறி இறங்கியதில் தலை நசுங்கிய நிலையில்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பிரேதத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். படுகாயமடைந்த பெண் தலைமை காவலரின் கணவர் தட்சிணாமூர்த்தி மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தை ஏற்படுத்திய லாரியை பறிமுதல் செய்து ஓட்டுநரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பழுதான லோடு ஆட்டோவை சாலையோரம் நிறுத்தி விபத்து ஏற்பட காரணமாக இருந்த ஒர்க் ஷாப் உரிமையாளரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் அரசு மருத்துவமனையில் விபத்து குறித்து நேரில் விசாரணை மேற்கொண்டு உயிரிழந்த தலைமை காவலர் பரிமளாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இது காவல்துறையினர் மற்றும் அப்பகுதி மக்கள்  மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Next Story

சிக்கிய புர்ஜ் கலிஃபா; மிதக்கும் 'துபாய்'

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
the trapped Burj Khalifa; Floating 'Dubai'

துபாயில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. குறிப்பாகத் துபாயின் சர்வதேச விமான நிலையம் வெள்ளத்தில் சிக்கித் தத்தளித்து வருகிறது.

கடந்த சில நாட்களாகவே துபாயில் வரலாறு காணாத அளவிற்குக் கன மழை பொழிந்து வருகிறது. இதனால் துபாயின் முக்கிய நகர்ப் பகுதிகளில் வெள்ளம் தேங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் குடியிருப்புகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் மிதக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. துபாயின் மிக உயர்ந்த கட்டிடமான புர்ஜ் கலிஃபா கட்டிடத்திற்குக் கீழ் மற்றும் அதன் அருகே உள்ள வணிக வளாகங்களைச் சுற்றிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இது தொடர்பான காட்சிகள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையில் வெள்ளம் சூழ்ந்ததால் விமானத்தை இயக்கவும் மற்றும் விமானங்களைத் தரையிறக்கவும் முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.