திருச்சி மாவட்டம், லால்குடி, ஆலம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சைவ சற்குணன். இவர், தமிழில் முனைவர் பட்டம், திருக்குறள் புலவர் பட்டம், ஓலைச் சுவடியியல், கல்வெட்டியியல் பட்டயம் சமஸ்கிருதத்தில் பட்டயம் ஆகியவை பெற்றுள்ளார். மேலும் முதுநிலை தமிழ் ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியராக கடந்த 20 ஆண்டுகளாக பணியாற்றியுள்ளார். தற்போது திருச்சி முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளராக பணியாற்றி வருகிறார்.
இவர், புதுக்கவிதை, பல்வேறு ஆராய்ச்சி மற்றும் கட்டுரைகள், யாப்பியல் படைப்பில் குமார வயலூர் திருச்சதகவந்தாதி, வயலூர் மறப்பிலிநாதன் போற்றித் திருத்தாண்டகம், வயலூரான் கலிவெண்பா, சிவனுறை பதிகள் 108, திருச்செந்தூர் திருச்சதகவந்தாதி உள்ளிட்ட நூல்களையும் இயற்றியுள்ளார். கல்வெட்டியலில் தனக்குள்ள ஈடுபாட்டின் காரணமாக தமிழ் பிராமி எழுத்துக்களை கற்று அதை சிறு சிறு வாக்கியங்களில் எழுதி வந்துள்ளார். இதில் முழுமையாக ஏதேனும் செய்ய வேண்டும் என விரும்பிய சைவ.சற்குணம் “ஆதித்தமிழை அறிவாய் தமிழா” என்ற நூலை தற்போது வெளியிட்டுள்ளார்.
இதில் கி.மு 5-ம் நூற்றாண்டில் இருந்து 2-ம் நூற்றாண்டு வரை உள்ள காலகட்டங்களில் தமிழில் எத்தகைய எழுத்துருவை பயன்படுத்தினார்களோ அதே தமிழ் பிராமி எழுத்துக்களை பயன்படுத்தி திருக்குறளின் 1330 குறள்களை எழுதியுள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது; “தமிழ் பிராமிய எழுத்துக்களின் திருக்குறள் அனைத்தையும் கடந்த 5 மாதங்களில் எழுதி நூலாக வெளியிட்டுள்ளேன். இந்த நூல் 260 பக்கங்களில் தற்போது வெளிவந்துள்ளது. இந்த நூலை யார் வேண்டுமானாலும் எளிதாக படிக்கலாம் இதற்கு வசதியாக நூலிலேயே அட்டவணையும் கொடுத்துள்ளேன். குறிப்பாக தமிழ் பிராமி எழுத்துக்களில் வெளியிட காரணம் நமது முன்னோர்கள் முற்காலத்திலேயே எவ்வளவு வலிமையான எழுத்து வடிவத்துடன் இருந்திருக்கிறார்கள் என்பதைப் பார்க்கும்போது ஆச்சரியமாக உள்ளது. இதை தற்போது இளைய தலைமுறை அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக நாம் அனைவரும் அறிந்த திருக்குறளை தமிழ் பிராமி எழுத்துக்களை கொண்டு எழுதி உள்ளேன்.
ஒரு மொழி எழுத்தாகி வார்த்தையாக்கி வரி வடிவத்திற்கு வளமையான இலக்கணத்துடன் வரவேண்டுமென்றால் அதற்கு பல ஆயிரம் ஆண்டுகள் ஆகும் என்கின்றனர் மொழியியல் வல்லுனர்கள். நமது தமிழ்மொழி 3000 ஆண்டுகளுக்கு முன்பே அந்த நிலையை எட்டிவிட்டது என்றால் நமது ஆளுமைதான் மிகச் சிறப்பான விஷயமாக உள்ளது. இதை அடுத்த தலைமுறைக்கு கடத்த வேண்டும் என்பதுதான் இந்த நூலின் நோக்கம்” என்று தெரிவித்தார்.