கோவை மாவட்டம் கொடிசியாவில் தொழில்துறையினர் கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று (11-09-24) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பல்வேறு தொழில் முனைவோர்களுடன் ஆலோசனை நடத்தினர். அப்போது, ஜி.எஸ்.டி வரி குறைப்பு தொடர்பான பல்வேறு அமைப்பினரும் கேள்விகள் எழுப்பி கருத்து தெரிவித்தனர்.
இதில், இனிப்பு, காரம் வகை தின்பண்டங்களுக்கு ஜி.எஸ்.டி வரியில் குளறுபடி இருப்பதாக, கோவையைச் சேர்ந்த பிரபல உணவகமான அன்னப்பூர்ணா உணவக உரிமையாளர் சீனிவாசன் பல்வேறு கேள்விகளை எழுப்பினார். இதில் பேசிய உணவக உரிமையாளர் சீனிவாசன், “Bunக்கு ஜி.எஸ்.டி கிடையாது. ஆனால், Bunக்குள்ள வைக்குற கிரீமுக்கு 18% ஜி.எஸ்.டி இருக்கு.. கஸ்டமர் கிரீமை கொடுத்துடு நானே Bunக்குள்ள வச்சு சாப்பிட்டுக்குறேன் சொல்றாரு. கடைய நடத்த முடியல மேடம்.
என் கடைக்கு வந்த உங்கள் எம்.எல்.ஏ வானதி சீனிவாசனிடம் ஜி.எஸ்.டி பற்றி கேட்டால், வட இந்தியர்கள் ஸ்வீட் வகைகளை அதிகம் சாப்பிடுவதால் ஸ்வீட்டுக்கு 5 சதவீதமும், காரத்துக்கு 12 சதவீதமும் ஜி.எஸ்.டி போடுவதாக கூறுகிறார். இப்படி செய்தால் என்ன ஆவது? தமிழ்நாட்டில் ஸ்வீட், காரம், காஃபி தான் அதிகம் விற்பனையாகிறது. தயவு செய்து அதை ஆலோசியுங்கள் மேடம். ஸ்வீட் கார வகை உணவுப் பண்டங்களுக்கு ஒரே மாதிரியான ஜி.எஸ்.டி வேண்டும். ஏனென்றால், ஒரு குடும்பம் வந்தால் கம்ப்யூட்டரே திணருது மேடம்” என நகைச்சுவையாக பேசினார். இவரது பேச்சுக்கு, அந்த அரங்கம் முழுவதும் சிரிப்பலை ஏற்பட்டது.