ஓசூரில், திமுக பிரமுகர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில், நீதிமன்றத்தில் சரணடைந்த பிரபல ரவுடி உள்ளிட்ட நான்கு பேரிடம் ஆறு நாள்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க ஓசூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் இமாம்பாடாவைச் சேர்ந்தவர் மன்சூர் அலி (49). ரியல் எஸ்டேட் தொழில் அதிபர். திமுகவில் சிறுபான்மைப் பிரிவு பொறுப்பாளராகவும் இருந்து வந்தார்.
கடந்த பிப். 2ம் தேதியன்று, ஓசூர் காமராஜ் காலனியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைப்பயிற்சிக்குச் சென்றிருந்தார். நடைப்பயிற்சியை முடித்துவிட்டு அங்கிருந்த ஒரு இருக்கை மீது அமர்ந்து இருந்தார். அப்போது இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர் கொண்ட கும்பல், அவரை சுற்றிவளைத்து சரமாரியாக வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றது.
இந்த வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வந்த ஓசூரைச் சேர்ந்த பிரபல ரவுடி கஜா என்கிற கஜேந்திரன், கூட்டாளிகள் சந்தோஷ்குமார், கோவிந்தராஜ், யஷ்வந்த்குமார் ஆகிய நான்கு பேர், கடந்த பிப். 4ம் தேதி, ஈரோடு மாவட்டம் கொடுமுடி நீதிமன்றத்தில் சரணடைந்தனர். பின்னர் அவர்கள் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
நேற்று முன்தினம் (பிப். 10) கோவை சிறையில் இருந்து அழைத்து வரப்பட்ட அவர்கள், ஓசூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிமன்ற உத்தரவின்பேரில் நால்வரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
அவர்களை 7 நாள்களுக்கு காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்த ஓசூர் காவல்துறையினர், ஓசூர் நீதிமன்றத்தில் நேற்று (பிப். 11) மனுதாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிமன்ற நடுவர் தாமோதரன், சரணடைந்த கஜா என்கிற கஜேந்திரன் உள்ளிட்ட நான்கு பேரையும் 6 நாள்களுக்கு காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார். இதையடுத்து அவர்களை ஓசூர் நகர காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச்சென்றனர்.