சென்னை திருவொற்றியூரில் கல்லூரி படிப்பில் இளைஞர் ஒருவர் அதிகமாக அரியர் வைத்திருந்ததால் தாய் கண்டித்ததில் தாயையும், சகோதரனையும் கழுத்தை அறுத்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை திருவொற்றியூர் திருநகர் தெருவில் வசித்து வருபவர் பத்மா. இவர் அக்குபஞ்சர் தெரபிஸ்ட்டாக பணியாற்றி வந்துள்ளார். பத்மாவின் கணவர் முருகன் கிரேன் ஆப்ரேட்டராக ஓமன் நாட்டில் பணியாற்றி வருகிறார். பத்மா, முருகன் தம்பதிக்கு நித்தேஷ் (22), சஞ்சய் (14 ) என்று இரு மகன்கள் உள்ளனர். பிஎஸ்சி டேட்டா சயின்ஸ் படித்துள்ளார். சஞ்சய் திருவொற்றியூரில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று 11 மணியளவில் நித்தேஷ் அவருடைய பெரியம்மா மகள் மகாலட்சுமி என்பவருக்கு செல்போன் மூலம் குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் 'நாங்கள் அனைவரும் வீட்டை விட்டு செல்கிறோம். எங்களுடைய வீட்டு சாவியை ஒரு பையில் போட்டு உங்கள் வீட்டு வாசலில் வைத்திருக்கிறேன்' எனத் தெரிவித்திருந்தார். அந்தக் குறுஞ்செய்தியை மகாலட்சுமி பார்க்காமல் விட்டுள்ளார். அடுத்தநாள் காலை எழுந்து செல்போனை பயன்படுத்திய பொழுது நித்தேஷ் அனுப்பிய குறுஞ்செய்தியைக் கண்டு அதிர்ச்சியடைந்த மகாலட்சுமி, உடனடியாக வீட்டு வாசலுக்கு சென்றபோது குறுஞ்செய்தியில் நித்தேஷ் குறிப்பிட்டபடி வெளியே ஒரு பையும், அதில் சாவியும் இருந்தது.
உடனே சாவியை எடுத்துக்கொண்டு வீட்டுக்குச் சென்று வீட்டை திறந்து பார்த்தபோது வீட்டில் இருந்து துர்நாற்றம் வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மகாலட்சுமி அக்கம் பக்கத்தினர், உதவியுடன் சென்று உள்ளே பார்த்த பொழுது பிளாஸ்டிக் பை ஒன்றில் சுற்றி வைக்கப்பட்ட நிலையில் பத்மா மற்றும் இளைய மகன் சஞ்சய் ஆகிய இருவரும் சடலமாக கிடந்தனர். உடனடியாக இது தொடர்பாக காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த திருவொற்றியூர் காவல் நிலைய போலீஸ் உடல்களைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் டேட்டா சயின்ஸ் படித்த நித்தேஷ் 14 அரியர் வைத்திருந்ததால் தாய் பத்மா அவரை தொடர்ந்து கண்டித்து வந்துள்ளார். அதேபோல் சகோதரன் சஞ்சையும் அரியர் வைத்திருப்பது தொடர்பாக அடிக்கடி சொல்லிக் காட்டியதால் ஆத்திரத்தில் இருந்த நித்தேஷ் இருவரையும் கழுத்தை அறுத்து கொலை செய்தது தெரியவந்துள்ளது.
மேலும் கொலையை மறைப்பதற்காக இருவரது சடலங்களையும் பிளாஸ்டிக் பையில் மூட்டை கட்டி வீட்டில் வைத்துவிட்டு சாவியை உறவினர் வீட்டின் முன்பு போட்டுவிட்டு குறுஞ்செய்தி அனுப்பியது தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக நித்தேஷை போலீசார் தேடி வந்த நிலையில், நித்தேஷ் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்ய முயன்றதாகவும் ஆனால் இறுதியில் தற்கொலை செய்ய மனமின்றி சுற்றித்திரிந்த போது கைது செய்துள்ளனர். இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக நித்தேஷிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.