ஒரு மாணவருவருக்கு ஏதோ ஒரு திறன் இருக்கும் ஆனால் புதுக்கோட்டை மாவட்டம், ஆதனக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த ஜெயலெட்சுமி என்ற ஏழை மாணவிக்கு பேச்சு, கட்டுரை, அறிவியல், வினாடிவினா, போட்டித் தேர்வு, படிப்பு, கபடி பலவற்றிலும் சாதிக்கும் திறன் உள்ளது. தற்போது அவரது சாதனையாக இணைய வழியில் அவர் எழுதிய அறிவியல் சார்ந்த கட்டுரையை பாராட்டிய அமெரிக்கா நிறுவனம் அடுத்த போட்டிக்கு நேரில் அழைப்புக் கொடுத்துள்ளது. நேரில் நடக்கும் போட்டியில் வெற்றி பெற்றால் 10 ஆயிரம் டாலர் பரிசும் அறிவித்துள்ளது. ஆனால் அமெரிக்கா செல்ல தான் வழியில்லை.
ஆதனக்கோட்டை திருவள்ளுவர் நகரை சேர்ந்த கருப்பையா கூலித் தொழிலாளி – அழகுவள்ளி தம்பதியின் மூத்த மகள் தான் ஜெயலெட்சுமி, அடுத்தது மகன் கோவிந்தராஜ். பல வருடங்களுக்கு முன்பே கருப்பையா இவர்களை விட்டு சென்றுவிட்டார். அம்மா அழகுவள்ளி தினக் கூலி வேலை செய்து வளர்த்து வருகிறார். குடும்ப வறுமை, சூழ்நிலைகளை நினைத்தே படிக்கவும், விளையாடவும் தொடங்கிய ஜெயலெட்சுமி ஆதனக்கோட்டை பள்ளியில் தொடங்கி தொடர்ந்து வெற்றிகள் பெற்றார்.
இந்த நிலையில் குடும்ப சூழ்நிலைகளை நினைத்தே அம்மாவுக்கும் மனிநிலை பாதிக்கப்பட்டது. அடுத்த இடி கஜா புயல் மூலம் இறங்கி குடியிருந்த ஓட்டு வீட்டையும் உடைத்துப் போட்டது. அதன் பிறகு ஜெயலெட்சுமியின் சித்தப்பா கண்ணன் வீட்டில் தங்கி இருந்து புதுக்கோட்டை ராணியார் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்துக் கொண்டிருக்கிறார்.
தனது படிப்புச் செலவுக்காக திறனாய்வுத் தேர்வு எழுதி கிடைக்கும் சன்மானத்தை பயன்படுத்தி வருகிறார். பள்ளி மூலம் எந்த போட்டி என்றாலும் கலந்து கொண்டு முதலிடம் பிடித்து பள்ளிக்கும் பெயர் வாங்கிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். பன்முகத்திறன் கொண்ட மாணவியை பாராட்டி கலை பண்பாட்டுத்துறை இளந்திரு விருது வழங்கி பாராட்டியுள்ளனர்.
இந்தநிலையில் தான் அமெரிக்கா வாசிங்டனில் வசிக்கும் அருப்புக்கோட்டை புதுக்கோட்டை ராமலிங்கம் நடத்தும் கோ 4 குரு என்ற நிறுவனம் இணைய வழியில் நடத்திய அறிவியல் கட்டுரைப் போட்டியில் கலந்து கொண்டு பெஸ்ட் பர்பார்மர் என்று தேர்வு செய்யப்பட்டார்.
தேர்வு செய்யப்பட்ட ஜெயலெட்சுமியை தொடர்பு கொண்ட நிறுவனம் 2020 ல் அமெரிக்காவில் நடக்கும் நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டு வெற்றி பெற்றால் 10 ஆயிரம் டாலர் பரிசு வழங்கப்படும் என்று அழைப்புக் கொடுத்துள்ளனர். மேலும் அமெரிக்கா சென்று வர ஆகும் செலவை தாங்களே ஏற்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர். அதற்கான செலவு ரூ. 1.69 லட்சம். அன்றாடம் செலவுக்கே திணறும் மாணவியால் எப்படி இவ்வளவு தொகையை திரட்ட முடியும் என்று கிராமத்தினரும், பள்ளி நிர்வாகமும் அமைதியாக உள்ளனர்.
ஆனால் மாணவி ஜெயலெட்சுமி.. அடுத்தடுத்து என்னால் பல போட்டிகளில் சாதிக்க முடிந்தது. அப்படித்தான் அமரிக்காவில் நடந்த ஆன்லைன் கட்டுரைப் போட்டியிலும் கலந்துகொண்டு தேர்வு செய்யப்பட்டிருக்கிறேன். அங்கே நடக்கும் போட்டியிலும் என்னால் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. ஆனால் போக வர ஆகும் செலவுக்கு பணம் இல்லை. பணம் இல்லாமல் கிடைக்கும் வாய்ப்பு கை நழுவிப் போகுமோ என்று திக் திக் என்று உள்ளது. என் மீது நம்பிக்கை வைத்து எனக்கு உதவி செய்யும் நல்ல உள்ளங்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு உதவி செய்யும் நல்லவர்களை என்றைக்கும் மறக்கமாட்டேன்.
நிச்சயம் எனக்கு உதவிகள் செய்ய யாராவது முன்வருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. உதவி செய்யவரும் நல் உள்ளங்கள் நான் படிக்கும் புதுக்கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி நிர்வாகத்திடமே தொடர்பு கொள்ளலாம் என்றார் நம்பிக்கையுடன்.
இந்த மாணவியின் சாதனை தொடர வேண்டும் என்ற நோக்கத்தில் நாம் நமக்கு தெரிந்த சிலரிடம் இதுபற்றி சொன்ன போது.. செலிவனங்களில் பங்கெடுத்துக் கொள்வோம் என்றும் நேரில் அந்த மாணவியை பார்த்து முடிந்த உதவிகளை செய்வதாகவும் நிமல்ராகவன் என்ற இளைஞரும், அமெரிக்கா வரும் மாணவிக்கு அங்கு தேவையான உதவிகளை செய்ய காத்திருக்கிறோம் என்று பெருமாள் என்பவரும் உறுதி அளித்துள்ளனர். அதேபோல சாதனை தமிழச்சியின் அடுத்த இலக்கை எட்ட உதவும் மனம் கொண்டவர்கள் உதவிகள் செய்யலாம்.