ஆகஸ்ட் 20 ஆம் தேதி மதுரையில் ‘வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு’ என்ற பெயரில் அதிமுக மாநாடு நடைபெறவிருக்கிறது. அதிமுக பொதுச்செயலாளராக இபிஎஸ் பொறுப்பேற்ற பிறகு நடக்கும் அதிமுகவின் இந்த முதல் மாநில மாநாட்டில் பங்கேற்பது குறித்து, விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சிவகாசியில் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி தலைமையேற்றுப் பேசினார்.
“விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என பத்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்களை இந்த மாநாட்டுக்கு அழைத்துச் செல்லவேண்டுமென முடிவெடுக்கப்பட்டுள்ளது. இபிஎஸ் சந்தோசப்படும் அளவிற்கு நம்முடைய விருதுநகர் மேற்கு மாவட்டம், கழக நிர்வாகிகளையும் பொதுமக்களையும் இளைஞர்களையும் மாநாட்டில் பங்குபெறச் செய்யவேண்டும்.
வருங்காலம் அதிமுகவுக்கே என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த மாநாட்டில் மிகப் பிரமாண்டமான எழுச்சியை இபிஎஸ் நடத்திக் காண்பிக்கவிருக்கின்றார். விருதுநகர் மேற்கு மாவட்டத்தில் இருந்து ஒட்டு மொத்தமாக கிளைக் கழகச் செயலாளர்கள், கிளைக் கழகப் பொறுப்பாளர்கள், வார்டு கழகச் செயலாளர்கள், வார்டு கழகப் பொறுப்பாளர்கள், ஒன்றிய கழகச் செயலாளர்கள், ஒன்றிய கழக நிர்வாகிகள் மற்றும் அனைத்து நிர்வாகிகளும் பொறுப்பாளர்களும், தங்கள் வசதிகளுக்கு ஏற்ப மக்களைத் திரட்டி கலந்து கொள்ள வேண்டும். இதன் மூலமாக, விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக ஒரு வரலாற்றை உருவாக்க வேண்டும். மாநாட்டிற்கு வரும் வாகனங்களில் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன், இபிஎஸ் படமும் பெரிதாக இருக்க வேண்டும்.
கழகத்தின் எதிர்காலமே இன்றைக்கு இபிஎஸ் தான். அதிமுகவின் நம்பிக்கை நட்சத்திரம், விடிவெள்ளியும் இபிஎஸ் தான். அவருக்கு உரிய முறையில் கட்சி நிர்வாகிகள் அங்கீகாரம் கொடுத்து, அவரது பெயருக்கு இழுக்கு வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். திருமணங்கள், கட்சி நிகழ்ச்சிகள் மற்ற நிகழ்ச்சிகளுக்கு விளம்பர போர்டு வைத்தால், இபிஎஸ் படம் உரிய மரியாதையோடு பெரிய படமாக வைக்கவேண்டும். அதற்குக் கீழே என் படம் சிறிதாக இருக்க வேண்டும். பல்வேறு சோதனைகளைத் தாண்டி பல்வேறு இன்னல்களைத் தாண்டி ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு இந்த இயக்கம் இருக்குமா, இருக்காதா, தொலைந்து விடுமா என்று பேசியவர்களுக்கு மத்தியில், அதிமுக மிகப்பெரிய இயக்கம் என்பதை நிரூபித்து, தன்னை வளர்த்து, இயக்கத்தையும் வளர்த்திருக்கிறார் இபிஎஸ். அடுத்து அதிமுக ஆட்சிதான் வரப்போகிறது. இபிஎஸ் தான் முதலமைச்சராக வரப்போகிறார்.
டில்லியில் இ.பி.எஸ்.ஸுக்கு கிடைத்த மரியாதையை நாம் பார்க்கிறோம். அங்கு இபிஎஸ்ஸுக்கு முக்கியத்துவம் கொடுத்தது நமக்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம். டில்லியில் ஜெயலலிதாவுக்குப் பிறகு, நமக்குக் கிடைக்கக்கூடிய மரியாதையை மீட்டுக் கொடுத்தவர் இபிஎஸ். மதுரையில் நடைபெற உள்ள அதிமுக மாநாடு திமுகவுக்கு மிகப்பெரிய பயத்தை உருவாக்க வேண்டும்.
அடுத்து வரப்போவது அதிமுக ஆட்சிதான், முதல்வர் ஆகப்போவது இபிஎஸ் தான் என்ற நம்பிக்கையை நாம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். மாநாடு ஏற்பாடு குறித்து சிவகாசியில் வரும் 29ம் தேதி விருதுநகர் மாவட்ட ஒருங்கிணைந்த அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவிருக்கிறது. இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், ஆர்.பி. உதயகுமார் உள்ளிட்ட மூத்த அதிமுக நிர்வாகிகள் 13 பேர் கலந்து கொள்கின்றனர்.
திமுகவுக்கு ஏற்பட்டிருக்கும் பல்வேறு பிரச்சனைகள் காரணமாக அவர்களுக்கு தற்போது நேரம் சரியில்லை. அதிமுகவுக்கு ஏறு கட்டமாய் உள்ளது. இபிஎஸ்ஸுக்கு ராசி மிகவும் அருமையாக உள்ளது. அவர் எதிலும் வெற்றி கண்டுவருகிறார். நான்கரை ஆண்டுக்கால ஆட்சியில், பொற்கால ஆட்சியை இபிஎஸ் கொடுத்தார். இபிஎஸ் ஆட்சிதான் தங்கமான ஆட்சி என்று பொதுமக்கள் பேசுவதை நாம் கேட்க முடிகிறது. தென் மாவட்டம், குறிப்பாக விருதுநகர் மாவட்டம், அதிமுகவின் இரும்புக்கோட்டை என்பதை நிரூபிக்கும் வகையில் நம்முடைய பணிகள் இருக்க வேண்டும்” என்று பேசினார்.