கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள அரங்கூர் கிராமத்தைச் சேர்ந்த ரெங்கசாமி விஜயா தம்பதியின் மகன் கோபிகிருஷ்ணன். இவர் சின்ன வயதிலிருந்தே கிரிக்கெட் மீது அதீத ஆர்வம் கொண்டு இருந்துள்ளார். தோனி என்றால் இவருக்கு உயிர் மூச்சு என்று கூறுகிறார். இவர் குடும்ப சூழ்நிலை காரணமாக பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு கடந்த 10 ஆணடுகளுக்கு முன்பு துபாய் சென்றார். அங்கு ஆன்லைன் தொழில் செய்து வந்துள்ளார்.
அங்கு சென்றாலும் அவருக்கு கிரிகெட் மீது இருந்த ஆர்வம் துளிகூட குறையவில்லை. அங்கு சென்று தொழில் செய்தாலும் அவர் விடுமுறை நாட்கள் மற்றும் ஓய்வு நேரங்களில் நண்பர்களுடன் தூபாயில் கிரிக்கெட் விளையாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். துபாயில் நடைபெறும் மேட்ச்களில் தோனி விளையாடும் அனைத்து மேட்சிகளையும் தவறாமல் பார்த்துவிடுவார். ஒரு முறை விடுமுறைக்கு இந்தியா வந்துள்ளார். அப்பொழுது கிரிக்கெட் மேட்ச் துபாயில் தோனி விளையாடகிறார் என்று தெரிந்ததும் தனது விடுமுறையை ரத்து செய்துவிட்டு தூபாய்க்கு உடனடியாகச் சென்றுள்ளார்.
அந்த அளவிற்கு தோனியின் தீவிர ரசிகர் ஆவார். இவருக்கு கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு அன்பரசி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவருக்கு கிசோர், சக்திதரன் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் கடந்த சில நாட்களுக்கு முன் இந்தியா வந்திருந்த நிலையில் ஜ.பி.எல் T20 மேட்ச் நடைபெறுவதால் நாம் ஏதாவது தோனிக்கு புகழ்சேர்க்கும் அளவில் வித்தியாசமாகச் செய்ய வேண்டும் என இவருக்கு உள்மனதில் எண்ணம் ஓடிக்கொண்டிருந்துள்ளது. அதில் ஒன்று தனது வீட்டை ஐ.பி.எல் வீரர்கள் அணியும் ஆடை கலரை வீட்டின் சுவர் முழுவதும் பூச வேண்டும் என தோன்றியுள்ளது.
உடனே தனது குடும்பத்தாரிடம் கூறியுள்ளார். குடும்பத்தாரும் அவருக்கு பச்சை கொடி காட்டவே இவர் இன்னும் உற்சாகம் அடைந்து தனது வீட்டை முழுவதும் மஞ்சள் நிறத்தில வண்ணம் பூசி வீட்டின் முன்புறம் தோனி படமும் பக்கவாட்டில் சென்னை சூப்பர்கிங்ஸின் சிங்கப் படத்தையும் சுமார் ஒன்னறை லட்சம் செலவு செய்து வரைந்து வீட்டின் முகப்பில் ஹோம் ஆஃப் தோனி ஃபேன் என எழுதியுள்ளார். ஒரு கிரிகெட் வீரருக்காக தனது வீட்டையே மாற்றியுள்ள ரசிகரையும் இவர் வரைந்துள்ள தோனி மற்றும் சென்னை சூப்பர்கிங்ஸ் சிங்கப் படத்தையும் பொதுமக்களும் கிரிகெட் ரசிகர்களும் வந்துபார்த்து பாராட்டிவிட்டுச் செல்கின்றனர். சென்னை சூப்பர்கிங்ஸ் அணி சமீபகாலமாக ஒரு சில போட்டிகளில் தோல்வியடைந்ததால் தோனி மீது ஒரு சாரார் அவதூராக பேசிவரும் நிலையில் கோபிகிருஷ்ணன் செயலால் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதனை அறிந்து கோபிகிருஷ்ணனை தொடர்புகொண்டோம். அப்போது அவர் நக்கீரன் இணையதளத்துடன் பேசுகையில், “தோனி எப்போதும் சிறந்த ஆட்டக்காரர். எப்போதும் அவர் ‘தல’தான். தோல்விக்கு அவர் மட்டுமே காரணம் என்று சித்தரித்து விமர்சனம் செய்கிறார்கள். வெற்றியைக் கொண்டாடும் நாம், தோல்வியையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். சமூக வலைதளங்களில் அவரை விமர்சனம் செய்தது என்னை மனதளவில் பாதித்தது.
தோனி ரசிகர்களில் நானும் ஒருவன். அவருக்கு எதிரான விமர்சனங்களை மாற்ற வேண்டும் என்று முடிவு செய்தேன். அதன் அடிப்படையில் என் அப்பா, அம்மா, சகோதரர்கள் சம்மதத்தின்பேரில் சென்னை அணியின் கலரை பெயிண்ட் அடித்து தோனி படமும், அவர் பேட் பிடிக்கும்படி உள்ள படத்தையும் வரைந்தேன். இதனை அவரை பாராட்டும் வகையில் செய்தேன். ரசிகர்கள் மத்தியில் அவருக்கு எப்போதும் மதிப்பு உண்டு” என்றார்.
மேலும் தொடர்ந்த அவர், “என் வீட்டுப் படங்களை பார்த்தவர்கள் எனக்கு ஃபோன் செய்கிறார்கள். இந்தப் படத்தைப் பார்த்த பிறகு தோனியை விமர்சனம் செய்தவர்கள், மாற்றிக்கொண்டனர். கள்ளக்குறிச்சியில் இருந்து தோனி ரசிகர்கள் நான்கு பேர் நேரடியாக வந்து என்னைச் சந்தித்துப் பேசினர். இதுவே எனக்குப் பெரிய சந்தோசம். மேலும் தோனிக்கு இதனைக் காணிக்கையாக செய்தேன்.
தோல்வியில்தான் நாம் தோள்கொடுக்க வேண்டும். வெற்றியை எப்படி எடுத்துக்கொள்கிறோமோ, அதைப்போல தோல்வியையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். இதனை தோனி ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏற்றுக்கொள்வார்கள். நம் வீட்டில் படிப்பவர்கள் தேர்வில் தோல்வியடைந்தால், அவரை மீண்டும் ஊக்கப்படுத்தி மீண்டும் தேர்வு எழுதச் சொல்வதில்லையா? மீண்டும் அவர்கள் தேர்ச்சி பெற்று நல்ல நிலைமைக்கு வருவதில்லையா? அதைப்போலத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.” என்றார்.
மேலும் இன்று நடைபெறவிருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் vs ஐதராபாத் மேட்சை தனது வீட்டுக்கு முன் பெரிய எல்.இ.டி. திரை வைத்து ஊர் மக்களுக்கு ஒளிப்பரப்பப் போவதாகவும் தெரிவித்தார்.