வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
அந்த வகையில் தொடர் கனமழை காரணமாகப் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி தேனி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (23.11.2023) ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, நீலகிரி, விருதுநகர் ஆகிய 7 மாவட்டங்களில் செயல்படும் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (23.11.2023) ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் மேல்நிலை வகுப்புகளுக்கு இன்று நடைபெற இருந்த பருவத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் எனக் கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் தொடர் கனமழை காரணமாக கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் தாலுகாவில் உள்ள காரமடை, சிறுமுகை ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதியில் செயல்பட்டு வரும் 193 பள்ளிகளுக்கும் இன்று ஒரு நாள் (23.11.2023) மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி உத்தரவிட்டுள்ளார்.