கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களின் பல இடங்களில் கனமழை பொழிந்து வருகிறது. நேற்று முன் தினம் இரவு முதல் தொடர்ந்து மழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் தவித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் அதிகனமழை எச்சரிக்கை காரணமாகப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் நலன் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி ஆகிய நான்கு மாவட்டங்களில் செயல்பட்டு வரும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (18.12.2023) ஒரு நாள் மட்டும் விடுமுறை ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
அதோடு திருநெல்வேலியில் அமைந்துள்ள மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட அனைத்து கல்லூரிகளிலும் நாளை (18.12.2023) நடைபெற இருந்த பருவத் தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்படுவதாகப் பல்கலைக்கழக பதிவாளர் ஏற்கெனவே அறிவித்திருந்தார். இந்த சூழலில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் இன்று (18.12.2023) காலை 8.30 மணி வரை அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் அரையாண்டுத் தேர்வுகளை ஒத்திவைப்பது மற்றும் மறு தேதியில் நடத்துவது தொடர்பாகச் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் முடிவு செய்யலாம் எனப் பள்ளிக் கல்வித்துறை சார்பில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. தொடர் கனமழை எதிரொலியாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்று (18.12.2023) நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
ஏற்கெனவே, 4 மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்திருந்த நிலையில், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 3 மாவட்டங்கள் மற்றும் கொடைக்கானல் வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (18-12-23) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்திற்கு மட்டும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.