கோடை காலம் தொடங்கி வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. நீர்ச்சத்து குறைபாட்டை தடுப்பதற்காக ஒவ்வொரு சுகாதார நிலையங்களிலும் ஓ.ஆர்.எஸ் கரைசல்களை ஆயத்தமாக வைத்திருக்கும்படி தமிழக அரசு அறிவித்துள்ளது. கோடை காலம் தொடங்கியுள்ளதால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் பலரும் சுற்றுலாத் தலங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.
மேலும் கோடைக் காலத்தையொட்டி கடும் வறட்சியான சூழல் நிலவுவதால் மேற்குத்தொடர்ச்சி மலை உள்ளிட்ட வனப்பகுதியில் வசிக்கும் காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளு, கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் உணவு மற்றும் குடிநீரைத் தேடி வனவிலங்குகள் கிராமங்களை நோக்கி படையெடுக்கும் நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. அதோடு இந்திய வானிலை ஆய்வு மையம் சார்பில் தமிழகத்திற்கு தொடர்ந்து வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நாளை (01.05.2024) முதல் ஜூன் 2 ஆம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் விடுமுறைக்கால அவசர வழக்குகளை வாரந்தோறும் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் தாக்கல் செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளர் ஜோதிராமன் வெளியிட்டுள்ளார். அந்த உத்தரவில் அவசர கால வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகளின் பெயரையும் பதிவாளர் ஜோதிராமன் வெளியிட்டுள்ளார்.